2014-11-24 16:00:45

வாரம் ஓர் அலசல் – பெண்ணே விழித்தெழு, வீறுகொள்.


நவ.24,2014. அன்பு நேயர்களே, ஒரு வயது யானைக்குட்டி ஒன்றின் வீரம் நிறைந்த செயல் ஒன்று இந்த நவம்பர் மாதம் 12ம் தேதி இணையதளங்களைக் கலக்கிக்கொண்டிருந்தது. அந்தச் செயலைப் பார்த்த எவரும் வியக்காமல் இருக்க முடியாது. ஆப்ரிக்காவின் சாம்பியா நாட்டில் Norman Carr Safaris Chinzombo முகாமிலுள்ள ஆற்றுப்படுகையில் Luangwa பூங்காவில், பசியோடு இருந்த பதினான்கு சிங்கங்கள் சேர்ந்து அந்த யானைக்குட்டியை விரட்டி விரட்டித் தாக்கின. ஒரு சிங்கம் அந்த யானையின் முதுகின்மீது ஏறி சவாரி செய்துகொண்டு அதைக் கடிக்க, இன்னும் இரண்டு மூன்று சிங்கங்கள் அதன் பின்புறம் தாவித்தாவிக் கடிக்க, மற்ற சிங்கங்கள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து யானைக்குட்டியை விரட்ட, அவைகளிடம் கடிவாங்கிய வேதனையுடன் அந்தக் யானைக்குட்டி அவற்றைத் தனது தும்பிக்கையால் விரட்ட விரட்ட, அதன் முதுகின்மீது சவாரி செய்த ஒரு சிங்கம் மட்டும் இறங்கவே இல்லை. பின்னர் யானைக்குட்டி ஆற்றில் இறங்கி தண்ணீரில் நடந்தது. அப்போதும் விடவில்லை சிங்கங்கள். தண்ணீரிலும் விரட்டின. ஒருவழியாய் அதன் முதுகின்மீது இருந்த சிங்கம் கீழே நழுவி விழுந்தது. பின்னர் அந்த யானைக்குட்டி ஓடிஓடி அந்தச் சிங்கங்களை விரட்டியது. இறுதியில் ஒரு வயது யானைக்குட்டி பதினான்கு சிங்கங்களையும் பின்வாங்கச்செய்து தனது உயிரைக் காப்பாற்றியது. இது குறித்து கடந்த முப்பது வருடங்களாக, சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தப் பூங்காவைச் சுற்றிக்காட்டும் வழிகாட்டி சொன்னார் – எனது இத்தனை வருட அனுபவத்தில் இப்படியொரு காட்சியைக் கண்டது இதுவே முதல் முறை என்று. இந்த யானைக்குட்டியின் வீரத்தைப் பார்த்தவர்கள், அதற்கு வலிமைக்கும், எண்ணற்ற வீரச் செயல்களுக்கும் பெயர் பெற்ற Hercules என்று பெயர் சூட்டியுள்ளார்கள். அன்பு நேயர்களே, தனது தாயிடமிருந்து பிரிந்து வந்துவிட்ட இந்த ஒரு வயது யானைக்குட்டி, தாயைத்தேடி அலைந்த சமயம் சிங்கங்களிடம் மாட்டிக்கொண்டது. ஆயினும் தனியொரு ஆளாக இந்தச் சிங்கங்களை விரட்டிவிட்டது. ஒரு கட்டத்தில் சிங்கங்கள் அதற்குப் பயந்து பின்வாங்கின. இந்தக் காட்சியை இணையத்தில் பார்த்தபோது, இன்று பெண்களும் சிறுமிகளும் இந்த யானைக்குட்டிபோல்தான் வீரமுடன் செயல்பட வேண்டும் என்று மனது நினைத்தது. இன்று உலகில் அரசியலிலும் சரி, மற்ற பணிகளிலும் சரி, பெண்களின் பங்கு அதிகரித்துள்ளது. வளர்ந்த நாடாகிய அமெரிக்க ஐக்கிய நாட்டைவிட இந்திய அரசியலில் பெண்களின் பங்கு அதிகம். ஆனாலும், உலகின் பல நாடுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறையவில்லை.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் கிராமத் திருவிழாவுக்கு பாதுகாப்புப் பணிக்காக சென்ற போலீஸ் காவலர் சைலேந்திர குமார் சுக்லா என்பவர், அங்கு நடன நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோது திடீரென மேடைக்கு ஏறிச் சென்றார். அப்போது நடனமாடிக் கொண்டிருந்த பெண் அருகே சென்று, அவரைத் தொடர்ந்து நடனமாடக் கூறி, தனது பாக்கெட்டில் இருந்த பணத்தை ஒவ்வொன்றாக எடுத்து அந்தப் பெண்ணின் மீது வீசினார். ஒரு கட்டத்தில், அந்தப் பெண் தொடர்ந்து ஆட முடியாமல் சோர்வுடன் மெதுவாக ஆடத் தொடங்கினார். இதனால் கோபமடைந்த காவலர் தனது கைத்துப்பாக்கியை எடுத்து, அந்தப் பெண்ணை நோக்கி வைத்தபடி, தொடர்ந்து ரூபாய் நோட்டுகளையும் வீசி, நடனமாடுவதை நிறுத்தக்கூடாது என்று மிரட்டினார். காவலரின் மிரட்டலால் அச்சம் அடைந்த பெண்ணும் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் நடனமாடினார். அந்த இடத்தில் இருந்த அனைவரும் அதிர்ந்து, அந்தப் பெண்ணை விட்டுவிடும்படி அவரைக் கேட்டுக்கொண்டனர். ஆனால், யாரும் குறுக்கிடக் கூடாது என்று அவர் மிரட்டல் விடுத்ததால் அனைவரும் ஒதுங்கி நின்றனர். இந்தக் காவலர் மதுபோதையில் இப்படிச் செய்துள்ளார் என்று பின்னர் தெரியவந்துள்ளது.

எந்த ஒரு கொடுஞ்செயலுக்கும் இறுதியில் பலிகடா ஆவது பெரும்பாலும் பெண்களாகவே இருக்கின்றனர். இதே நவம்பர் 11ம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்தில் பென்தாரியில் அரசு நடத்திய குடும்பக்கட்டுப்பாட்டு முகாம்களிலேயே அறுவைசிகிச்சைக்கு உள்ளான 15 பெண்கள் உயிரிழந்துள்ளனர். மிகக்குறைந்த இரத்த அழுத்தம், வாந்தி போன்ற காரணங்களால் ஏனையவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 90க்கும் அதிகமானவர்களுக்கு இன்னும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர் எனச் செய்தியில் வாசித்தோம். அதேபோல் ஈராக், சிரியா போன்ற நாடுகளில் நடக்கும் சண்டைகளில் புலம் பெயர்வோரின் காட்சிப்படங்களைப் பார்த்தால் பெருமளவாகப் பெண்கள்தான் கைக்குழந்தைகளையும் மற்ற பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு நடக்கின்றனர். இந்தப் பெண்கள், ஐஎஸ் இஸ்லாமிய அரசின் நபர்களால் விலைக்கு பாலியல் அடிமைகளாக விற்கப்படுகின்றனர் என்றும் ஓர் ஊடகச் செய்தியில் வாசித்தோம்.

அன்பர்களே, இன்றைய நிகழ்ச்சியில் பெண்களைப் பற்றி அதிகம் பேசுகிறோம். காரணம், நவம்பர் 25, இச்செவ்வாய் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம். இந்த உலக தினத்தை உருவாக்கிய ஐக்கிய நாடுகள் நிறுவனம் அதற்கானக் காரணத்தையும் விளக்கியுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறை, மனித உரிமை மீறலாகும். பெண்களுக்கு எதிரான வன்முறை, சட்டத்திலும், அதனை நடைமுறைப்படுத்துவதிலும் பெண்களுக்கு எதிராகக் காட்டப்படும் பாகுபாடுகளின் விளைவே. பெண்களுக்கு எதிரான வன்முறை, வறுமை ஒழிப்பு, எய்ட்ஸ் நோய் ஒழிப்பு, அமைதியையும் பாதுகாப்பையும் வளர்த்தல் போன்ற முயற்சிகளுக்குத் தடையாக உள்ளது. இன்று உலகில் எழுபது விழுக்காட்டுப் பெண்கள்வரை தங்கள் வாழ்நாளில் வன்முறையை அனுபவிக்கின்றனர்.

15 வயதுக்குட்பட்ட 3 கோடிச் சிறுமிகள் தங்களின் பெண் உறுப்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். இன்று உலகில் வாழும் எழுபது கோடிக்கு மேற்பட்ட பெண்கள் சிறுவயதிலே திருமணம் செய்துவைக்கப்பட்டவர்கள். இவர்களில் 25 கோடிச் சிறுமிகளுக்கு 15 வயதுக்குள்ளாகவே திருமணம் முடிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு முன்னரே திருமணம் செய்துவைக்கப்படும் சிறுமிகள் தங்கள் கல்வியை முடிக்க முடியாமல் இருக்கின்றனர். மொத்தத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை, தலைமுறைகளுக்கும் ஏற்படும் இழப்பாக உள்ளதாக ஐ.நா. கூறுகிறது. மேலும், 1930ம் ஆண்டில் சித்ரவதை மற்றும் வன்முறையால் ஆட்சியைக் கைப்பற்றி, 1961ம் ஆண்டுவரை தொமினிக்கன் குடியரசை ஆட்சி செய்த அரக்கத்தனமான சர்வாதிகாரி இரஃபேல் த்ரூஹில்லோ, மூன்று அரசியல் ஆர்வலர்களான மிரபெல் சகோதரிகளைக் கொடுமையாய்க் கொலை செய்த நாள் நவம்பர் 25. தொமினிக்கன் குடியரசின் சர்வாதிகார ஆட்சியில் 1960ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி இச்சகோதரிகள் கொலை செய்யப்பட்டனர். எனவேதான் நவம்பர் 25ம் தேதியை பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமாக ஐ.நா. அறிவித்துள்ளது.

இளம்பெண்களும் பெண்களும் குழுவாகப் பாலியல் வன்செயலுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்படும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு உலக நாளில், அன்பர்களே, உங்களைச் சுற்றி பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை எண்ணிப்பாருங்கள். அப்படி பாதிக்கப்படும் சிறுமிகளும் பெண்களும் உங்கள் குடும்பத்தவராய், உங்கள் உறவுகளாய் இருந்தால் நீங்கள் அதிகம் பாதிக்கப்படுவீர்கள். அதுவே மற்ற பெண்களாய் இருந்தால் ஒருவேளை நீங்கள் கவலைப்படாமலும் இருக்கலாம். ஆனால் வீடுகள், அலுவலகங்கள், வெளிடங்கள் என, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எங்கு இடம்பெற்றாலும் அதற்கு எதிராகப் போராடி, இத்தகைய வன்முறை உணர்வுகளைக் கொண்டுள்ள மக்களின் மனங்களைத் தூய்மைப்படுத்துவோம் என இந்நாளில் உறுதி எடுப்போம். போர்களின்போது பாலியல் வன்முறைகளை ஒரு கருவியாகப் பயன்படுத்தும் நிலைமைகளை ஒழிப்பதற்கு நம்மால் இயன்ற வழிகளைக் கையாள்வோம்.

அதேநேரம் பாகிஸ்தானில் 2002ம் ஆண்டில் ஒரு கொடுமையைச் சந்தித்த முக்தரன் மாய் என்ற பெண்ணின் வீர வாழ்வு பெண்களுக்கு எடுத்துக்காட்டாய் இருக்கட்டும். மீராவாலா என்ற குக்கிராமத்தில் வாழ்ந்துவந்த முக்தரன் மாய்க்கு 13 வயதில் ஒரு தம்பி. இவர் தன்னைவிட வயதில் மூத்த, மாஸ்டாயி இனப்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். ஆனால் இக்குற்றம் நீரூபிக்கப்படாத நிலையில், தம்பி செய்த தவறுக்காக அவரின் அக்கா முக்தரன் மாய்க்குத் தண்டனை வழங்கப்பட்டது. கிராமப் பஞ்சாயத்து கூடி முக்தரன் மாய் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக வேண்டுமெனத் தீர்ப்புச் சொல்லப்பட்டது. உடனடியாக நான்கு மனித மிருகங்கள் முக்தரன் மாய் மீது பாய்ந்து துவம்சம் செய்தன.

இந்தக் கொடுமைக்கு ஆளான முக்தரன் மாய், இதில் துவண்டுபோகாமல், தனக்கு இந்தக் கொடுமையை இழைத்த கிராமப் பஞ்சாயத்தையும், அவர்களுக்கு உதவிய காவல்துறையையும் சந்திக்கு இழுத்தார். அவர்களது தோலை உலகத்துக்கு உரித்துக்காட்டினார். ஊடகங்களும் நல்ல மனிதர்களும் முக்தரன் மாய் பக்கம் நின்றன. சாட்சி சொல்லக்கூட கிராமத்தவர்கள் பயந்தார்கள். இறுதியில் தவறு செய்தவர்களுக்குத் தண்டனை கிடைத்தது. பாகிஸ்தான் அரசு இழப்பீடாக கணிசமான ஒரு தொகையையும் கொடுத்தது. அதை வைத்து ஒரு பள்ளிக்கூடத்தைத் தொடங்கினார் முக்தரன் மாய். பள்ளியில் பிள்ளைகள் சேருவதற்கு வீடுவீடாய்ச் சென்று பெற்றோரிடம் பேசினார். இப்போது அதே கிராமத்தில் தலைநிமிர்ந்து நிற்கிறார் முக்தரன் மாய். இவரின் இயற்பெயர் முக்தரன் பீபி. ஆனால் மாய் என்றால் மரியாதைக்குரிய அக்கா என்று பொருள். எனவே முக்தரன் பீபி, முக்தரன் மாயாக வலம் வருகிறார்.

சிறுமிகளே, பெண்களே, இன்னொரு முக்தரன் மாய் அக்காவாக, அந்த ஒரு வயது யானைக் குட்டியாக வீரமுடன் துணிந்து நில்லுங்கள். ஊரே போற்றும் மனிதராக உயருவீர்கள். ஆணியாகப் பிறந்துவிட்டால் அடிகள் புதிதல்ல என்று உணர்ந்து, வாங்கும் அடிகளையும், காயங்களையும் உயர்வுக்குப் பயன்படுத்துங்கள். கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் கவிதை வரிகள் போன்று, சிரித்துவரும் சிங்கமுண்டு, புன்னகைக்கும் புலிகளுண்டு, உரையாடி உயிர்குடிக்கும் ஓநாய்கள் உண்டு, பொன்னாடை போர்த்திவிட்டு உன்னாடை அவிழ்ப்பதுண்டு, பூச்செண்டில் ஒளிந்திருக்கும் பூநாகம் உண்டு, பள்ளத்தில் ஓர் யானை வீழ்ந்தாலும் - அதன் உள்ளத்தை வீழ்த்திவிட முடியாது, சுட்டாலும் சங்கு நிறம் எப்போதும் வெள்ளைதான். எனவே பெண்ணே விழித்தெழு, வீறுகொள்.







All the contents on this site are copyrighted ©.