2014-11-24 16:13:51

திருத்தந்தை பிரான்சிஸ் - தற்பெருமை கொண்ட திருஅவையையும், எதுவும் அற்ற 'வறியத் திருஅவை'யையும் நாம் வரலாற்றில் காண்கிறோம்


நவ.24,2014. எளிமையாக, வறுமையாக வாழும் திருஅவையே இவ்வுலகிற்கு இறைவனை வழங்கமுடியும், இதற்கு மாறாக நடக்கும் திருஅவை, தன் ஒளியை விளம்பரப்படுத்தும் சோதனைக்கு உள்ளாகும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
வறுமையில் வாடிய கைம்பெண் ஒருவர், இரண்டு காசுகளை, காணிக்கைப் பெட்டிக்குள் போட்ட நிகழ்வைக் கூறும் நற்செய்தியின் அடிப்படையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்கள் காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் மறையுரை வழங்கினார்.
நாளிதழ்களில் இடம்பெறும் அளவு முக்கியத்துவம் ஏதுமற்ற கைம்பெண் ஆற்றிய சிறு செயல், இத்தனை நூற்றாண்டுகளாக நமக்குப் பாடமாக அமைந்து வருகிறது என்று திருத்தந்தை தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.
மனுமகன் வருவார் என்ற எதிர்பார்ப்புடன் திருஅவை காத்திருப்பதால், தலைவன் இல்லாத ஒரு கைம்பெண்ணாகவும் திருஅவையை நாம் உருவகிக்க முடியும் என்று திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
வரலாற்றில் திருஅவை காட்டியுள்ள ஒருவகை போக்குகளைப் பற்றிக் குறிப்பிட்டத் திருத்தந்தை, தன்னையே விளம்பரப்படுத்தும் தற்பெருமை கொண்ட திருஅவையையும், எதுவும் அற்ற 'வறியத் திருஅவை'யையும் நாம் வரலாற்றில் காண்கிறோம் என்று கூறினார்.
கதிரவனின் ஒளியைப் பிரதிபலிக்கும் நிலவைப் போல, திருஅவையானது இயேசு என்ற உண்மை ஒளியைப் பிரதிபலிக்க வேண்டுமே தவிர, தன்னுடைய ஒளியை உலகில் விளம்பரப்படுத்தக்கூடாது என்று திருத்தந்தை அறிவுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.