2014-11-24 16:14:32

திருத்தந்தை பிரான்சிஸ் - இறையன்பு, பிறரன்பு என்ற இருபெரும் கட்டளைகளை, புதிய புனிதர்கள் தங்கள் வாழ்வில் உயிர்பெறச் செய்தனர்


நவ.24,2014. கிறிஸ்துவை அரசர் என்று அறிக்கையிடுவதில் நம் மீட்பு அடங்குவதில்லை; மாறாக, அவர் கொணர்ந்த விண்ணரசின் விழுமியங்களை, குறிப்பாக, கிறிஸ்து கொணர்ந்த பிறரன்பை செயலாற்றுவதில் நம் மீட்பு அடங்கியுள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறு வழங்கிய மறையுரையில் கூறினார்.
நவம்பர் 23, இஞ்ஞாயிறு கொண்டாடப்பட்ட கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று, 4 இத்தாலியர்களையும், 2 இந்தியர்களையும் புனிதர்களாக உயர்த்தும் திருப்பலியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் நிறைவேற்றினார்.
புதிய புனிதர்கள் அனைவரும் தங்களுக்கே உரிய படைப்பாற்றல் திறனோடு, இறையன்பு, பிறரன்பு என்ற இருபெரும் கட்டளைகளை, தங்கள் வாழ்வில் உயிர்பெறச் செய்தனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில் குறிப்பிட்டார்.
இவ்வுலகக் கண்ணோட்டத்தில் மிகச் சிறியவர்களாகக் கருதப்படும் மக்களுக்கு, இப்புதியப் புனிதர்கள் சிறந்த பணியாற்றினர் என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவர்கள் அனைவரும், "என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள்" (மத்தேயு 25:34) என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு உரிமையாளர்களாகி, விண்ணகம் அடைந்துள்ளனர் என்று கூறினார்.
தன் ஆடுகள் மீது முழுமையான அன்புகொண்ட நல்லாயன் என்பதில்தான் கிறிஸ்துவின் அரசத் தன்மை வெளியாகிறது என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காயப்பட்ட மனிதர்களை, கவனமுடன் பராமரிக்கும் பணியின் வழியாக, நாம் இந்த நல்லாயனின் வலதுபக்கம் நிற்கும் மந்தைக்குள் இடம்பெறமுடியும் என்று எடுத்துரைத்தார்.
திருப்பலியின் இறுதியில், நான்கு இத்தாலியப் புனிதர்களையும், இந்தியாவைச் சேர்ந்த இரு புனிதர்களையும் பற்றி சிறப்பாகக் குறிப்பிட்டத் திருத்தந்தை, மறைபரப்புப்பணியில், இந்திய நாடு காட்டிவரும் ஆர்வத்தைப் பாராட்டியதோடு, அந்நாட்டில் ஒப்புரவும், மதங்களிடையே நல்லுணர்வும் வளர தன் செபங்களையும், ஆசீரையும் வழங்கினார்.
இத்தாலியைச் சேர்ந்த நால்வரையும், இந்தியாவின் அருள் பணியாளர், முத்திப்பேறு பெற்ற Kuriakose Elias Chavara அவர்களையும், அருள் சகோதரி, முத்திப்பேறு பெற்ற Euphrasia Eluvathingal அவர்களையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனிதர்களாக உயர்த்தியத் திருப்பலியில், 20,000த்திற்கும் அதிகமான இந்தியர் கலந்துகொண்டனர் என்று ஆசியச் செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.