2014-11-24 16:13:39

திருத்தந்தை : புதிய புனிதர்கள் இறைவன் மீது கொண்டிருந்த அன்பு, பிறரன்பில் வெளிப்பட்டது


நவ.24,2014. இஞ்ஞாயிறன்று புனிதராக அறிவிக்கப்பட்ட இரு இந்திய துறவியருக்கும், இறை அன்பே, அவர்கள் புனிதத்துவம் அடைவதற்கு நோக்கமாகவும், ஆதரவாகவும், ஆதாரமாகவும் இருந்தது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 23, ஞாயிறன்று நடைபெற்ற புனிதர் பட்டமளிப்பு விழாவையொட்டி உரோம் நகர் வந்திருந்த இந்தியத் திருப்பயணிகளை திங்களன்று காலை, புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதிய புனிதர்கள் குரியாக்கோஸ் எலியாஸ் சாவ்ரா அவர்களும், யூஃப்ரேசியா எலுவாத்திங்கலும் தங்கள் புனிதத்துவத்திற்கு ஆதாரமாக இறையன்பைக் கொண்டிருந்த அதேவேளை, அந்த இறை அன்பை பிறரன்பில் வெளிப்படுத்தினர் என்றார்.
புனித வாழ்வை மேற்கொள்வதிலும், பிறரின் மீட்புக்காகவும் கடுமையாக உழைத்தவர் துறவி குரியாக்கோஸ் சாவ்ரா எனப் பாராட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளோடு ஆழ்ந்த ஒன்றிப்பைக் கொண்டிருந்த துறவி யூஃப்ரேசியா, 'செபிக்கும் அன்னை' என அழைக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.
நற்செய்தி மதிப்பீடுகளின்படி வாழ்ந்த இந்தப் புதிய புனிதர்கள், இயேசு மீதும், திருநற்கருணை மீதும், திருஅவை மீதும் கொண்டிருந்த அன்பு, நமக்குப் பாடமாக இருக்கட்டும் என மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.