2014-11-22 16:21:09

மியான்மார் திருஅவையின் 500ம் ஆண்டுக் கொண்டாட்டங்கள்


நவ.22,2014. மியான்மாரில் கத்தோலிக்க மதம் அடக்கி ஒடுக்கப்பட்ட நிலை மாறி, தற்போது ஏனைய நாடுகளுக்கும் மறைபோதகர்களை அனுப்பும் அளவுக்கு தலத்திருஅவை வளர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில் கத்தோலிக்கம் வந்ததன் 500ம் ஆண்டை இந்த வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் சிறப்பித்துவரும் மியான்மார் தலத்திருஅவை, 2011ம் ஆண்டில் உருவான அரசு சட்ட தளர்வுகளுக்குப்பின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுவருவதாக அறிவித்தார், அந்நாட்டு பேராயர் சார்ல்ஸ் மவுங் போ.
தற்போது மியான்மாரில் ஏறத்தாழ 300 மாணவர்கள் அருள்பணியாளர் நிலைக்கு தங்களைத் தயாரித்து வருவதாகவும் தெரிவித்தார் பேராயர் போ.
மியான்மார் நாட்டை கட்டி எழுப்புவதிலும், அமைதி நடவடிக்கைகளிலும், தேசிய ஒப்புரவுப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்துவதுடன், குரலற்றோரின் குரலாக செயல்படவேண்டிய தேவையும் மியான்மார் தலத்திருஅவைக்கு உள்ளது என்று மியான்மார் கத்தோலிக்க ஆயர் பேரவையின் உயர் செயலர் அருள்பணி Maurice Nyunt அவர்கள் கூறினார்.

ஆதாரம் : Catholic Online








All the contents on this site are copyrighted ©.