2014-11-22 16:20:27

திருத்தந்தை : பல்வேறு சவால்களை எதிர்நோக்கிவரும் இந்நாட்களில், இளையோர் மீது தனிக் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்


நவ.22,2014. இறைவனின் அழைப்புக்கு, புதுப்பிக்கப்பட்ட ஆர்வத்துடன் பதிலளிப்பது, நம் வழிமுறைகளைச் சார்ந்து அல்ல, மாறாக, பதிலளிப்பதற்கு இசையும் நம் விருப்பத்தைச் சார்ந்து அமைகிறது என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
"நற்செய்தியின் மகிழ்வு, மறைபோதக மகிழ்வு" என்ற தலைப்பில், பொதுநிலையினருக்கான திருப்பீட அவையால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டோரை இச்சனிக்கிழமை காலை திருப்பீடத்தில் சந்தித்து, உரையாற்றியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய உலகின் சவால்களுக்கு பதிலுரைக்க வேண்டுமெனில், நாம் அமைப்பு முறைகளை சார்ந்திராமல், நம் தனி வரத்தின் அடிப்படை ஊற்றுக்குச் செல்லவேண்டும் என்று கூறினார்.
குடும்பங்கள் பல்வேறு சவால்களை எதிர்நோக்கிவரும் இந்நாட்களில், இளையோர் மீது தனிக் கவனம் செலுத்தவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியார் நம் அனைவருக்கும் வழங்கியுள்ள 'ஒன்றிப்பு' என்ற கொடையைக் குறித்தும் கருத்துக்களைப் பகிர்ந்தார்.
நம் தனிவரத்தை உயிர் துடிப்புடன் பேணுதல், மற்றவர்களின் சுதந்திரத்தை மதித்தல், ஒன்றிப்புக்காக எப்போதும் உழைத்தல் என்ற மூன்று மையக் கருத்துக்களில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையை வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.