2014-11-22 16:15:11

கிறிஸ்து அரசர் பெருவிழா ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 நவம்பர் 23, இஞ்ஞாயிறன்று, கிறிஸ்து அரசர் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். 87 ஆண்டுகளுக்கு முன், இதே நவம்பர் 23ம் தேதி, ‘கிறிஸ்து அரசர் வாழ்க’ என்று சொல்லியபடி, ஓர் இளம் அருள் பணியாளர் ஒரு மறைசாட்சியாக, தன் உயிரை வழங்கினார். 1927ம் ஆண்டு, நவம்பர் 23ம் தேதி. மெக்சிகோ நாட்டில் ஓர் இளம் இயேசு சபை அருள் பணியாளருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. அதுவும், ஒரு பொதுவான இடத்தில், காவல் துறையினரால் அவர் சுட்டுக் கொல்லப்படவேண்டும் என்று மெக்சிகோ அரசுத் தலைவர் Plutarco Calles ஆணையிட்டார். காவல் துறையினர் அவரைச் சுடுவதற்கு துப்பாக்கிகளை உயர்த்தியதும், அந்த இளம் குரு அச்சமுற்று, தன் கிறிஸ்தவ நம்பிக்கையை கைவிட்டு, மன்னிப்பு கேட்பார் என்று அரசுத் தலைவர் எதிர்பார்த்தார். இளம் குரு மன்னிப்பு வேண்டுவதை செய்தித்தாள் நிருபர்கள் காணவேண்டும் என்று எண்ணி, மரணதண்டனை நிறைவேற்றும் இடத்திற்கு அவர்களை அரசுத்தலைவர் அழைத்திருந்தார்.
இளம் குருவை ஒரு சுவருக்கருகே நிறுத்தினர் காவல் துறையினர். அவருடைய இறுதி ஆவல் என்ன என்று கேட்ட காவல் துறை அதிகாரியிடம், தான் சிறிது நேரம் செபிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன்படி, அவ்விடத்திலேயே முழந்தாள் படியிட்டு, செபித்தார். தான் கொண்டுவந்திருந்த சிலுவையை எடுத்து, ஆழ்ந்த அன்புடன் அதை முத்தமிட்டார். பின்னர், அந்தச் சிலுவையைத் தன் வலது கரத்திலும், செபமாலையை இடது கரத்திலும் ஏந்தியபடி, இரு கரங்களையும் விரித்து நின்று, "கிறிஸ்து அரசர் என்றென்றும் வாழ்க!" என்று உரத்த குரலில் முழங்கினார். அந்நேரம், காவல் துறையினரின் குண்டுகள் அவர் மீது பாய அந்த இளம் இயேசு சபை அருள் பணியாளர் தன் உயிரை கிறிஸ்து அரசர் பாதங்களில் அர்ப்பணம் செய்தார். 36 வயது நிறைந்த அந்த இளம் இயேசு சபை அருள் பணியாளரின் பெயர், மிகுவேல் அகஸ்டின் ப்ரோ (José Ramón Miguel Agustín Pro Juárez).

20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் மெக்சிகோ நாட்டில் கத்தோலிக்கத் திருஅவைக்கு எதிராக அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்ட வேளையில், "கிறிஸ்து அரசர் என்றென்றும் வாழ்க!" என்ற அறைகூவலுடன் 'Cristeros' என்ற குழுவினர் போராடிவந்தனர். இக்குழுவின் ஒரு முக்கிய வழிகாட்டியாகச் செயல்பட்டவர், மிகுவேல் ப்ரோ. கிறிஸ்துவின் அரசு மெக்சிகோவில் மீண்டும் தழைத்து வளர, தன்னையே ஒரு விதையாக பூமியில் புதைத்தார் மிகுவேல் ப்ரோ.
இவரைப் போல பல்லாயிரம் வீர உள்ளங்கள் கிறிஸ்து அரசருக்காகத் தங்கள் உயிரை அர்ப்பணித்துள்ளனர். நாம் வாழும் இந்த 21ம் நூற்றாண்டிலும் கிறிஸ்தவர்கள் பலர், தங்கள் மதநம்பிக்கைக்காக கொல்லப்படுகின்றனர். இந்த ஞாயிறு நாம் கொண்டாடும் கிறிஸ்து அரசர் திருநாளன்று இந்த வீர உள்ளங்களை எண்ணி இறைவனுக்கு நன்றி சொல்கிறோம்.

கிறிஸ்து அரசர் திருநாளைப் பற்றி நினைக்கும்போது எனக்குள்ளே ஒரு சங்கடம். அதை முதலில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கிறிஸ்துவைப் பலகோணங்களில் நினைத்துப் பார்த்திருக்கிறேன், தியானித்திருக்கிறேன். நல்லாயனாக, நல்லாசிரியராக, மீட்பராக, நண்பராக, வழியாக, ஒளியாக, வாழ்வாக, .... இவ்வாறு பல கோணங்களில் கிறிஸ்துவை எண்ணிப்பார்க்கும்போது மன நிறைவு கிடைத்திருக்கிறது.
ஆனால் கிறிஸ்துவை அரசராக எண்ணும்போது மனதில் சங்கடங்கள் எழுகின்றன. கிறிஸ்து, அரசர், இரண்டும் நீரும் நெருப்பும் போல ஒன்றோடொன்று பொருந்தாமல் இருப்பது போன்ற ஒரு சங்கடம். ஏன் இந்த சங்கடம் என்று சிந்திக்கும்போது, ஓர் உண்மை தெரிந்தது. சங்கடம், கிறிஸ்து என்ற வார்த்தையில் அல்ல, அரசர் என்ற வார்த்தையில்தான்.

அரசர் என்றதும் மனதில் எழும் எண்ணங்களும், மனத்திரையில் தோன்றும் காட்சிகளும் இந்தச் சங்கடத்தின் முக்கியக் காரணம். அரசர் என்றால், மனத்திரையில் தோன்றும் உருவம் எது? பட்டும், தங்கமும், வைரமும் மின்ன உடையணிந்து, பலரது தோள்களை அழுத்தி வதைக்கும் பல்லக்கில் அமர்ந்துவரும் ஓர் உருவம்... சுருங்கச் சொல்ல வேண்டுமெனில், ஆடம்பரமாக வாழப் பிறந்தவர்... அரசர் என்றதும் மனதில் தோன்றும் இந்தக் கற்பனைக்கும், இயேசுவுக்கும் எள்ளளவும் தொடர்பில்லையே. பின், எப்படி இயேசுவை அரசர் என்று சொல்வது? சங்கடத்தின் அடிப்படையே இதுதான்.
அரசர் என்ற சொல்லுக்கு நாம் தரும் வழக்கமான, ஆனால், குறுகலான இந்த இலக்கணத்தை வைத்துப் பார்த்தால், இயேசு கட்டாயம் ஓர் அரசர் அல்ல. ஆனால், மற்றொரு கோணத்தில் இயேசுவும் ஓர் அரசர். அவர் நிறுவிய அரசுக்கு நிலபரப்பு கிடையாது... அப்பாடா, பாதி பிரச்சனை இதிலேயேத் தீர்ந்துவிட்டது. நிலம் இல்லை என்றால், போர் இல்லை, போட்டிகள் இல்லை, இதைப் பாதுகாக்கக் கோட்டை, கொத்தளங்கள் தேவையில்லை, படைபலம் தேவையில்லை, உயிர்பலி தேவையில்லை... எதுவுமே தேவையில்லை. ஆம், இயேசு கொணர்ந்த அரசுக்கு எதுவுமே தேவையில்லை.
இன்னும் ஆழமான ஓர் உண்மை இதில் என்னவென்றால், இறைவன் ஒருவரே தேவை, வேறெதுவுமே தேவையில்லை, என்று சொல்லக்கூடிய மனங்கள் மட்டுமே இந்த அரசுக்குச் சொந்தமான நிலம். அத்தகைய மனங்களில் தந்தையை அரியணை ஏற்றுவதுதான் இயேசுவின் முக்கிய பணி. இயேசுவுக்கு அரியணை இல்லையா? உண்டு. தந்தைக்கும், இயேசுவுக்கும் அரியணைகளா? ஆம். யார் பெரியவர் என்ற கேள்வி இல்லாததால், இந்த அரசில் எல்லாருக்குமே அரியணை, எல்லாருக்குமே மகுடம் உண்டு. எல்லாரும் இங்கு அரசர்கள்... இந்த அரசர்கள் மத்தியில் இயேசு ஓர் உயர்ந்த, நடுநாயகமான அரியணையில் வீற்றிருப்பார் என்று கற்பனை செய்துகொண்டு, தலையை உயர்த்தி, உயர்வான இடத்தில் அவரைத் தேடினால், ஏமாந்துபோவோம். உயர்ந்திருக்கும் நம் தலை தாழ்ந்தால்தான் அவரைக் காணமுடியும். காரணம்?... அவர் நமக்குமுன் மண்டியிட்டு, நம் காலடிகளைக் கழுவிக்கொண்டு இருப்பார். மக்கள் அனைவரையும் அரியணை ஏற்றி, அதன் விளைவாக, அம்மக்களின் மனம் எனும் அரியணையில் அமரும் இயேசு என்ற மன்னரைக் கொண்டாடவே இந்த கிறிஸ்து அரசர் திருநாள்.

குழந்தைப்பேறு இல்லாமல் தவித்த அயர்லாந்து நாட்டு அரசர் ஒருவர், தனக்குப் பின் அரியணையில் ஏறும் தகுதியுடைய வாரிசு ஒருவரை தேடுவதாக நாட்டு மக்களுக்கு அறிவித்தார். வாரிசாக விரும்புகிறவர்கள் ஒரு குறிப்பிட்ட நாளன்று அரண்மனைக்கு வரவேண்டும் என்றும் அறிக்கை வெளியிட்டார். தனது வாரிசாக விரும்புகிறவர் கடவுள் மீதும், அயலவர் மீதும் ஆழ்ந்த அன்பு கொண்டவராக இருக்கவேண்டும் என்பது மட்டுமே அரசர் விதித்திருந்த நிபந்தனை. பல இளையோர் அரசரின் இந்த அறிக்கையைக் கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். அரண்மனையை நோக்கிப் பயணம் மேற்கொண்டனர்.
அந்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருந்த ஒரு சிற்றூரில் ஏழ்மையில் வாழ்ந்து வந்த ஓர் இளைஞன், கடவுள் பக்தி மிக்கவர், அயலவர் மீதும் அதிக அன்பு கொண்டவர். ஊர் மக்கள் அனைவரும் அந்த இளைஞனை அரசரின் வாரிசாகும்படி தூண்டினர். ஊர்மக்களிடையே நிதி திரட்டி, அந்த இளைஞன் உடுத்திக்கொள்ள ஓர் அழகான மேலாடையை அவருக்குப் பரிசளித்தனர். அரண்மனைக்குச் செல்லும் நாள் வந்ததும், பயணத்திற்குத் தேவையான உணவையும் தந்து, அவரை வழியனுப்பி வைத்தனர்.
இளைஞன் அரண்மனையை நெருங்கியபோது, அதிகக் குளிராக இருந்தது. பனி பெய்து கொண்டிருந்தது. அரண்மனைக்கு அருகில், வழியோரத்தில், கொட்டும் பனியில் ஒருவர் கிழிந்த ஆடைகளுடன் குளிரில் நடுங்கியவாறு பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். இளைஞன் உடனே தான் அணிந்திருந்த அந்த அழகிய மேலாடையை அவருக்கு அணிவித்தார். தன்னிடம் எஞ்சியிருந்த உணவையும் அவருக்குக் கொடுத்தார்.
அரண்மனைக்குள் நுழைந்ததும், அங்கு காத்திருந்த ஆயிரக்கணக்கான இளையோரில் ஒருவராக, ஓர் ஓரத்தில் இவர் அமர்ந்தார். அப்போது அரசர் அவைக்குள் நுழைந்தார். அவரைக் கண்ட இளைஞனுக்கு அதிர்ச்சி. தான் வழியில் அந்தப் பிச்சைக்காரருக்கு கொடுத்திருந்த மேலாடையை அரசர் அணிந்திருந்தார். அரசர் நேரடியாக இளைஞனிடம் வந்து, அவரைக் கரம் பற்றி அழைத்துச் சென்றார். அவரைத் தன் அரியணையில் அமர வைத்து, "இவரே என் வாரிசு" என்று அறிவித்தார்.

மனதிற்கு நிறைவையும், மகிழ்வையும் தரும் பல கதைகளில் இதுவும் ஒன்று. எவ்விதப் பலனையும் எதிர்பாராமல் ஏழைகளுக்கு நாம் செய்யும் உதவிகள் ஏதோ ஒரு வகையில் நம்மை வந்தடையும் என்பதையும், அந்த ஏழைகளின் வடிவில் இறைவனையே நாம் சந்திக்கிறோம் என்பதையும் கதைகளாக கேட்டிருக்கிறோம். இக்கருத்துடன் சொல்லப்பட்டுள்ள பல கதைகளில் மிகவும் புகழ்பெற்றது லியோ டால்ஸ்டாய் அவர்கள் எழுதிய 'காலணிகள் செய்யும் மார்ட்டின்' - 'Martin the Cobbler' என்ற கதை.
இறைவன் மார்ட்டினைச் சந்திக்க வருவதாகச் சொல்லியிருந்ததால், அவர் வருவார் என்று நாள் முழுவதும் காத்திருக்கிறார் மார்ட்டின். அவர் காத்திருந்தபோது, தேவையில் இருந்த மூவருக்கு உதவிகள் செய்கிறார். மாலைவரை இறைவன் வராததால் மனமுடைந்த மார்ட்டின், 'கடவுளே, நீர் என் வரவில்லை?' என்று கேள்வி எழுப்புகிறார். கடவுளோ தான் அந்த மூவர் வழியாக அவரை அன்று மூன்று முறை சந்தித்ததாகச் சொல்கிறார்.
இன்றைய நற்செய்தியில் நமக்குச் சொல்லப்படும் பாடமும் இதேதான்: "பசியாக, தாகமாக, ஆடையின்றி, அன்னியராக இருக்கும் ‘மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்’ " (மத்தேயு 25:40) என்று இறைவன் நம்மிடம் சொல்கிறார்.

கடந்த ஞாயிறன்று நமக்குத் தரப்பட்ட நற்செய்திப் பகுதி, நம் இறுதி நாட்கள் குறித்து சிந்திக்கும்படி நம்மை அழைத்தது. தலைவன் வந்து கணக்கு கேட்கும்போது, நமக்கு வழங்கப்பட்டுள்ள திறமைகளுக்கு ஏற்ற சரியான கணக்கைத் தர தயாராக இருக்கவேண்டும் என்று சென்ற வாரம் எச்சரிக்கை தரப்பட்டது. நமது திறமைகளுக்கு ஏற்ற கணக்கு எவ்வகையில் அமையவேண்டும் என்பதை இந்த வார நற்செய்தி தெளிவுபடுத்துகிறது.
எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள திறமைகளைக் கொண்டு என் சொந்த வாழ்வை நான் எவ்விதம் மேம்படுத்திக் கொண்டேன் என்று எண்ணிப்பார்ப்பது சரியான கணக்கு அல்ல. மாறாக, என் திறமைகளைக் கொண்டு அடுத்தவர் வாழ்வை நான் எவ்வகையில் மேம்படுத்தியுள்ளேன் என்று காட்டுவதே சரியான, உண்மையான கணக்கு.
இவ்வுலக வாழ்வு முடிந்து, இறுதித் தீர்வை நேரத்தில் நம் கணக்கு வழக்குகளைப் பார்க்கும் இறைவன் இந்த ஒரு கேள்வியை மட்டுமே நம்மிடம் கேட்பார்: உன் வாழ்வைக்கொண்டு, உனக்கு வழங்கப்பட்டச் செல்வங்களை, திறமைகளை, வாய்ப்புக்களைக்கொண்டு அடுத்தவருக்கு என்ன செய்தாய்? முக்கியமாக, செல்வம், திறமை, வாய்ப்புக்கள் இவை யாவும் மறுக்கப்பட்டுள்ள மக்களுக்கு என்ன செய்தாய்? என்பது ஒன்றே, இறைவனாக, அரசனாக நம் முன் தோன்றும் இயேசு கேட்கும் கேள்வி.

கிறிஸ்து அரசர் பெருவிழாவிற்கு ஏன் இப்படி ஒரு நற்செய்தி வழங்கப்பட்டுள்ளது என்று எனக்குள் கேள்வி எழுந்தது. இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகள் கிறிஸ்துவை ஒரு அரசர் என்று நினைவுபடுத்தும் வரிகள். தொடர்ந்து வரும் வரிகள் அந்த அரசர் எவ்விதம் மற்ற அரசர்களிடமிருந்து மாறுபட்டவர், இந்த அரசருக்கே உரிய ஒரு முக்கிய பண்பு என்ன என்பதையெல்லாம் விளக்குகின்றன.
அரசருக்கு உரிய பண்புகளில் ஒன்று, நன்மை, தீமை இவற்றைப் பிரித்து, நல்லவற்றை வாழ வைப்பது, தீமைகளை அழிப்பது. கிறிஸ்து அரசரைப் பொருத்தவரை நன்மை, தீமை இரண்டையும் பிரிக்கும் ஒரே அளவுகோல்... அயலவர்.
பசியாய், தாகமாய், ஆடையின்றி இருக்கும் அயலவர்;
சொந்த நாட்டிலும், வேலைதேடி சென்ற நாட்டிலும் உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கும் அன்னியர், கைம்பெண்கள், அனாதைகள்;
காரணத்தோடும், காரணமின்றியும் சிறைகளில் வாடும் மக்கள்;
உடல் நலம் குன்றி, அடுத்தவரை அதிகம் நம்பியிருக்கும் நோயுற்றோர்;....
இப்படி கிறிஸ்து அரசரைப் பொருத்தவரை இந்த அயலவர் பட்டியல் நீளமானது.

தேவைகள் அதிகம் உள்ள இந்த அயலவர் பட்டியல், வெறும் பட்டியலா? அல்லது, நமக்குள் சங்கடங்களையும், கேள்விகளையும் ஆணிகளாக அறையும் சுத்தியலா?
முட்களால் பின்னப்பட்ட மகுடம் தாங்கி, சிலுவை என்ற சிம்மாசனத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் கிறிஸ்து அரசருக்கு முன் இன்று சிறிது நேரம் நிற்க முயல்வோம்.
இந்த அரசருக்கு முன் நிற்க, முக்கியமாக அவரது வலது பக்கம் நிற்க நாம் தகுதியுள்ளவர்களாய் இருக்கிறோமா? இந்த அரசனால் ஆசீர் பெறப் போகிறோமா? அல்லது விரட்டி அடிக்கப்படுவோமா?
தேவைகள் உள்ள மக்களில் இந்த அரசனின் உருவைக் கண்டு, உதவிக்கரம் நீட்டியிருந்தால், வலது பக்கம் நிற்கும் வாய்ப்பு பெறுவோம். கிறிஸ்து அரசர் வழங்கும் ஆசீரையும் பெறுவோம்.

இறுதியாக, இந்த ஞாயிறன்று, புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முத்திப்பேறு பெற்ற ஆறு பேரை புனிதர்களாக அறிவிக்கிறார். இந்தியாவைச் சேர்ந்த, முத்திப்பேறு பெற்ற Kuriakose Elias Chavara என்ற அருள் பணியாளர், முத்திப்பேறு பெற்ற Euphrasia Eluvathingal என்ற அருள் சகோதரி ஆகியோர் உட்பட, முத்திப்பேறு பெற்ற Giovanni Antonio Farina, Casoriaவின் Ludovico, Nicola Saggio, Amato Ronconi ஆகியோரை திருத்தந்தை புனிதர்களாக உயர்த்துகிறார். புதிய புனிதர்களின் பரிந்துரையால், நாம் அனைவரும் கிறிஸ்து அரசருக்கு உகந்த அரியணையாக நம் உள்ளங்களை மாற்ற முயல்வோம்.








All the contents on this site are copyrighted ©.