2014-11-21 16:03:06

திருத்தந்தை பிரான்சிஸ் : மனித சமுதாயத்தின் காயங்களை குணமாக்க முடியாது என்று மனம் தளர்ந்து போவது பெரும் ஆபத்து


நவ.21,2014. துன்பங்கள் பெருகிவரும் இக்காலத்தில், மனித சமுதாயத்தின் காயங்களை குணமாக்க முடியாது என்று மனம் தளர்ந்து போவது பெரும் ஆபத்து என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
நவம்பர் 20, இவ்வியாழன் முதல், 23 வருகிற ஞாயிறு முடிய இத்தாலியின் வெரோனா என்ற நகரில் நடைபெறும் ஒரு சமுதாய விழாவுக்கு, ஒலி-ஒளி வடிவத்தில் திருத்தந்தை அனுப்பியிருந்த செய்தி, விழா அரங்கில் இவ்வியாழன் மாலை ஒளிபரப்பானது.
கத்தோலிக்கத் திருஅவையில் சமுதாயப் படிப்பினைகள் என்ற கருத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழாவிற்கு, "நாம் வாழும் காலத்தில், இன்னும் பல வழிகள்" என்ற தலைப்பு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதை மகிழ்வுடன் குறிப்பிட்டத் திருத்தந்தை, புதிய வழிகளைத் தேட நாம் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று கூறினார்.
சமுதாயம் இன்று சந்திக்கும் பிரச்சனைகளுக்கு பொருளாதார அடிப்படையில் மட்டுமே தீர்வுகள் காண நினைப்பது நமது கண்ணோட்டத்தை அதிகமாக குறுக்கிவிடும் என்றும், மனித மாண்பு, உறவு, என்ற ஏனைய கண்ணோட்டங்களும் தேவை என்றும் திருத்தந்தை தன் செய்தியில் வலியுறுத்தினார்.
இளையோரை மையப்படுத்தி நடத்தப்படும் இந்த நான்கு நாள் விழாவிற்கு, இத்தாலிய அரசுத் தலைவர், Georgio Napolitano அவர்களும் வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.