2014-11-21 15:49:35

திருத்தந்தை பிரான்சிஸ் : பசுமையான மேய்ச்சலைத் தேடிச்செல்லும் மக்கள், குடிபுகும் நாடுகளிலும் தொடர்ந்து சவால்களைச் சந்திக்கின்றனர்


நவ.21,2014. ஒவ்வொரு மனித முகத்திலும் இயேசுவைக் காணும் விசுவாசிகளின் கூட்டமும், திருஅவையும், எல்லைகள், தடுப்புச்சுவர்கள் அற்ற ஒரு குடும்பத்தின் தாயாக விளங்குகின்றனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
நவம்பர் 17 இத்திங்கள் முதல், 21, இவ்வெள்ளி முடிய உரோம் நகர் உர்பானியா பாப்பிறைப் பல்கலைக் கழகத்தில், குடிபெயர்வோரின் மேய்ப்புப்பணியை மையப்படுத்தி நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு வந்திருந்த உறுப்பினர்களை, இவ்வெள்ளி காலை, திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, குடிபெயர்தல் என்ற உலகளாவிய ஒரு போக்கின் பல்வேறு சவால்களைக் குறித்துப் பேசினார்.
உலகமனைத்தையும் பாதித்துள்ள பொருளாதாரச் சரிவு, மூன்றாம் உலக நாடுகளை மிக அதிகமாகப் பாதித்துள்ளது என்று குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகையச் சூழலிலிருந்து வெளியேறி, பசுமையான மேய்ச்சலைத் தேடிச்செல்லும் மக்கள், குடிபுகும் நாடுகளிலும் தொடர்ந்து சவால்களைச் சந்திக்கின்றனர் என்று கூறினார்.
போதுமான ஊதியங்களைத் தேடி, வேற்று நாடுகளுக்குச் செல்லும் குடும்பத் தலைவர் அல்லது தலைவி, தங்கள் குடும்பங்களை விட்டு விலகுவதால், வளரும் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் திருத்தந்தை தன் உரையில் எடுத்துரைத்தார்.
வேற்று நாடுகளிலிருந்து குடியேறும் தொழிலாளிகளின் உழைப்பால் செல்வச் செழிப்பான நாடுகள், இன்னும் அதிக இலாபம் ஈட்டும் அதே வேளையில், உழைக்கும் தொழிலாளிகளின் மாண்பும், உரிமைகளும் வெகுவாகக் குறைந்து வருவது வேதனை தருகிறது என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
குடிபெயர்வோரின் மேய்ப்புப்பணி திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் அந்தோனியோ மரிய வேலியோ அவர்கள் தலைமையில், 93 நாடுகளைச் சேர்ந்த 300க்கும் அதிகமான உறுப்பினர்கள், தங்கள் ஒருவார கருத்தரங்கின் உச்சக் கட்டமாக, திருத்தந்தையைச் சந்தித்து, அவரது ஆசீரைப் பெற்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.