2014-11-21 15:48:50

திருத்தந்தை பிரான்சிஸ் : அருள்பணியாளர்களிடம் வர்த்தக மனப்பான்மை வெளிப்படுவது, மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றது


நவ.21,2014. வலுவற்ற நிலையில் தவறு செய்யும் ஓர் அருள்பணியாளரையோ, கோவில் பணியாளரையோ மக்கள் மன்னித்துவிடுவர்; ஆனால், பேராசை கொண்டு மக்களைச் சரிவர மதிக்காத பணியாளர்களை மக்கள் மன்னிக்கமாட்டார்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
தூய கன்னிமரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தத் திருநாளான இவ்வெள்ளியன்று, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றிய திருப்பலியில், இயேசு எருசலேம் கோவிலைச் சுத்தம் செய்த நிகழ்வை மையப்படுத்தி, திருத்தந்தை மறையுரை வழங்கினார்.
கடவுளைத் தேடி கோவிலுக்குச் சென்ற எளிய மக்கள், அங்கு நிலவிய ஊழல், பேராசை ஆகியவற்றைக் கண்டு அதிர்ச்சி கொண்டனர் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணியாளர்களிடம் வர்த்தக மனப்பான்மை வெளிப்படுவது, இன்றும் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றது என்று கூறினார்.
தான் அருள்பணியாளராகப் பணியைத் துவக்கிய வேளையில், ஒரு பங்குகோவிலில் திருமணத் திருப்பலி நேரத்தை சிறு கூறுகளாகப் பிரித்து விற்பனை செய்த ஓர் அருள்பணியாளரை தான் சந்தித்த நிகழ்வை திருத்தந்தை தன் மறையுரையில் நினைவுகூர்ந்தார்.
திருமண அருள்சாதனத்தைத் திருப்பலியுடன் கொண்டாட கோவிலை நாடி வரும் மக்கள், அத்திருப்பலியை ஒரு வர்த்தக நிலைக்குத் தாழ்த்திவிடும் அருள்பணியாளர்களை மன்னிக்கமாட்டார்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.
மீட்பு என்பது இறைவன் வழங்கும் இலவசக் கொடை. அந்த மீட்பை விலை கொடுத்து வாங்கும்படி மக்களைக் கட்டாயப்படுத்தும் அருள்பணியாளர்களை விரட்ட, இயேசு சாட்டையை எடுப்பார் என்று திருத்தந்தை தன் மறையுரையில் குறிப்பிட்டார்.
தன்னை முழுவதும் அர்ப்பணித்த அன்னை மரியா, கோவிலில் தன் வாழ்வைச் செலவிட்ட அன்னா போன்ற பெண்கள் வழியே நம் உடலை தூயதோர் ஆலயமாக இறைவனுக்கு ஒப்படைக்கக் கற்றுக்கொள்வோம் என்ற கருத்துடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.