2014-11-21 15:51:14

'கிறிஸ்தவ ஒன்றிப்பு' சங்க ஏட்டின் 50ம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்திற்கு திருத்தந்தையின் செய்தி


நவ.21,2014. இரண்டாம் வத்திக்கான் சங்கம் வெளியிட்ட கிறிஸ்தவ ஒன்றிப்பு (Unitatis Redintegratio) என்ற ஏடு, கிறிஸ்தவர்கள் மத்தியில் உருவாகியிருந்த ஆழமான காயங்களைக் குணப்படுத்தியது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
1964ம் ஆண்டு, நவம்பர் 21ம் தேதி, வெளியான 'கிறிஸ்தவ ஒன்றிப்பு' சங்க ஏட்டின் 50ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்க உரோம் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கருத்தரங்கிற்கு வருகை தந்த உறுப்பினர்களை, இவ்வியாழன் மாலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, அவர்களுக்காக எழுதியிருந்த செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
கிறிஸ்தவ ஒன்றிப்பு என்ற ஏடு வெளியான அதே வேளையில், மக்களின் ஒளி என்ற (Lumen Gentium) திருஅவை ஏடு, கீழை வழிபாட்டு முறை திருஅவைகள் என்ற ஏனைய இரு ஏடுகளும் வெளியானதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இவை அனைத்துமே திருமுழுக்கு என்ற அடிப்படையில் கிறிஸ்தவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகளாக இருந்தன என்று குறிப்பிட்டார்.
உரோமையின் ஆயராகவும், என்ற முறையில், பல்வேறு கத்தோலிக்கத் திருஅவைகளை ஒருங்கிணைக்கும் தலைவராகவும் பணியாற்றும் திருத்தந்தை என்ற முறையில், கடந்த 50 ஆண்டுகளில் கத்தோலிக்கத் திருஅவையும் ஏனைய திருஅவைகளும் மேற்கொண்டுள்ள ஒற்றுமை முயற்சிகளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நன்றி கூறினார்.
கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கென ஒவ்வோர் ஆண்டும் கத்தோலிக்கத் திருஅவை மேற்கொண்டு வரும் ஒன்றிப்பு வார செப முயற்சிகள், நம்மிடையே இன்னும் அதிகப் பலனை அளிக்கவேண்டும் என்ற தன் விருப்பத்தையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளிப்படுத்தினார்.
'கிறிஸ்தவ ஒன்றிப்பு' சங்க ஏட்டின் 50ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்க, நவம்பர் 18, இச்செவ்வாய் முதல் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஆயர்களும், அருள் பணியாளர்கள், அருள் சகோதரிகள் மற்றும் பலரும், இவ்வெள்ளியன்று கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்துடன் இந்தப் பொன்விழாவை நிறைவு செய்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.