2014-11-20 13:10:37

புதிய புனிதர்கள் - பாகம் 2


இம்மாதம் 23ம் தேதி கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் அருளாளர்கள் Nicholas Longobardi, சவாரா குரியாக்கோஸ், Amatus Ronconi, அருள்சகோதரி யூப்ராசியா, Giovanni Antonio Farina, Ludovico ஆகியோரை புனிதர்கள் என அறிவிக்கவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இருவரின் வாழ்க்கை வரலாறு இதோ.......

அருளாளர் Nicholas Longobardi

Giovanni Battista Wise என்ற திருமுழுக்குப் பெயரைக்கொண்ட அருளாளர் Nicholas Longobardi, 1650ம் ஆண்டு சனவரி 6ம் தேதியன்று இத்தாலியின் லொம்பார்த் என்ற சிறிய கடற்கரை நகரில் பிறந்தார். விவசாயத்தொழிலும், நெசவுத்தொழிலும் செய்து வந்த ஏழைக் குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளில் தலைச்சன் பிள்ளையாய்ப் பிறந்த ஜொவான்னிக்கு கல்வி கற்க முடியவில்லையெனினும், அவரது குடும்பம் அவரை மனித, நன்னெறி மற்றும் ஆன்மீக விழுமியங்களில் வளர்த்தது. Minims துறவு இல்லத்துக்கு இவர் அடிக்கடி சென்று வந்ததால் துறவற வாழ்வுமீது ஈடுபாடு ஏற்பட்டது. 1668ம் ஆண்டு மே 3ம் தேதி புனித பிரான்சிஸ் விண்ணேற்பு ஆலயத்தில் மூன்றாம் சபையில் சேர்ந்தார். இருபது வருடங்கள் விவசாயத் தொழில் செய்த இவரின் கிறிஸ்தவ சாட்சிய வாழ்வு பல மக்களைக் கவர்ந்தது. விவசாயம் செய்யும்போதே ஒரு கையில் செபமாலை தொங்கிக் கொண்டிருக்கும். செபித்துக்கொண்டே வேலை செய்தார். புனித பிரான்சிஸ் பவ்லா அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி minimaவில் சேருவதற்கு பெற்றோரிடம் அனுமதி கேட்டார். ஆனால் பெற்றோர் அவருக்கு அனுமதியளிக்கவில்லை. ஏனெனில் இவரது உதவி குடும்பத்திற்குத் தேவைப்பட்டது. இவரும் பெற்றோருக்குப் பணிந்து நடந்தார். ஆனால் ஜொவான்னி கண்பார்வையை இழந்தார். அதன்பின்னர் பெற்றோர் அனுமதியளித்தனர். அற்புதம் நடந்தது. இழந்த பார்வையை மீண்டும் பெற்றார். துறவு சபையில் சேர்ந்த ஜொவான்னி, நிக்கோலாஸ் என்ற புதிய பெயரையும் ஏற்றார். சமையல், வயல்கண்காணிப்பு, தோட்டவேலை, துறவு இல்லத்துக்கு முன்பாக பிச்சை எடுத்தல் போன்ற வேலைகள் இவருக்குக் கொடுக்கப்பட்டன. மறைக்கல்வியை நன்றாகப் போதித்தார். எனவே, மறைக்கல்வியைக் கற்பதற்கு, குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளை இவரிடம் அனுப்பினர். லொரேத்தோ அன்னைமரியா திருத்தலத்துக்கு பாதயாத்திரை சென்று, துருக்கியரிடமிருந்து வியன்னா காப்பாற்றப்படுமாறு செபித்தார. பின்னர் மூன்று ஆண்டுகள் இறைக்காட்சி அனுபவங்கள் இவருக்குக் கிடைத்தன. இவர் ஏழைகளுக்கு அதிகம் உதவினார், அவர்களுக்காகப் பணி செய்தார். இறுதியில் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு 1709ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி தனது 59ம் வயதில் காலமானார். திருச்சிலுவையை ஏந்தியவராய், ‘விண்ணகம், விண்ணகம்’ என்று சொல்லிக்கொண்டே உயிர்துறந்தார் நிக்கோலாஸ். 1786ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி திருத்தந்தை 6ம் பத்திநாதர், இவரை அருளாளர் நிலைக்கு உயர்த்தினார்.

அருளாளர் Amatus Ronconi

13ம் நூற்றாண்டைச் சேர்ந்த அருளாளர் Amatus Ronconi அவர்கள், ஆதீனத்தில் வாழ்ந்த ஒரு துறவி. இவர் ஒரு திருப்பயணியாகவும், தாதியராகவும் இருந்தார். இத்தாலியின் ரிமினிக்கு அருகில் Sldezzo என்ற ஊரில் 1238ம் ஆண்டு பிறந்த Amatus Ronconi, சிறுவயதிலே பெற்றோரை இழந்தார். உறவினர் ஒருவரிடம் வளர்ந்த இவர், திருமணம் செய்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். ஆனால், செப தப வாழ்வுக்கு இறைவன் தன்னை அழைப்பதாக இவர் உணர்ந்தார். அதனால் புனித பிரான்சிசின் மூன்றாம் சபையில் சேர்ந்த இவர், தனிமையான இடத்துக்குச் சென்று ஆதீனத் துறவி போன்று வாழத்தொடங்கினார். இவரை ஒரு முட்டாள், அறிவில்லாதவர் என்றே பலர் கருதினர். ஆனால் இறைவன் இவரது தூய வாழ்வு கண்டு மகிழ்ந்தார். இவர் வாழ்ந்த குடிசையின் மேல் ஓர் அதிசயமான ஒளி சுடர்விட்டது. வானகத்திலிருந்து பாடலும் கேட்டது. இஸ்பெயினின் சந்தியாகு தெ கொம்போஸ்தெல்லாவுக்குத் திருப்பயணம் செல்லும்போது தனது குடிசையைவிட்டு வெளியே வருவார். ரிமினிக்கு அருகில் Orciale மலையில் புனித மேரி மருத்துமனையைக் கட்டினார். அங்கு அமாத்தூஸ் ரொங்கோனி தனது கடைசி காலத்தைச் செலவிட்டார். இவர் மரணத்தைப் பார்த்து அஞ்சவில்லை. அனைத்து மகிழ்வையும் இவ்வுகப் பொருள்கள்மீது வைத்திருந்தால்தான் மரண நேரத்தில் பயம் வரும். எல்லாமே மரணத்தோடு முடிவதில்லை என்பதற்கு அமாத்தூஸ் அவர்களின் வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டாக இருக்கிறது.








All the contents on this site are copyrighted ©.