2014-11-20 16:17:40

திருத்தந்தையின் பயணத்திற்கு ஆகும் செலவுகளை மிகக் குறைவாகச் செய்ய முயன்று வருகிறோம் - பிலிப்பின்ஸ் கர்தினால் தாக்லே


நவ.20,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் பிலிப்பின்ஸ் நாட்டில் மேற்கொள்ளும் பயணம் மிக எளிமையாக, மக்களைச் சந்திக்கும் ஒரு பயணமாக அமையவேண்டும் என்று கூறியதை நினைவில் கொண்டு, அப்பயணத்திற்கு ஆகும் செலவுகளை மிகக் குறைவாகச் செய்ய முயன்று வருகிறோம் என்று கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் கூறினார்.
ஹையான் சூறாவளியால் பாதிக்கப்பட்ட இடங்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சென்று பார்வையிடும்போது, அங்குள்ள மக்களைச் சந்திப்பதை மட்டும் அவர் விரும்புகிறார் என்றும், அவ்விடத்தில் அரசு அதிகாரிகளையும், பிற முக்கிய நபர்களையும் அவர் சந்திக்கமாட்டார் என்றும் Palo உயர் மறைமாவட்டத்தின் பேராயர் John Du அவர்கள் கூறினார்.
திருத்தந்தையின் பயணம் ஆடம்பரமாக அமைவதற்கு ஆகும் செலவுகளைக் குறைத்து, அந்தத் தொகையை, அந்நாட்டில் துன்புறும் வறியோருக்கு வழங்கவேண்டும் என்பதே திருத்தந்தையின் விருப்பம் என்று பயணத்தை ஏற்பாடு செய்யும் அருள் பணியாளர் Anton Pascual அவர்கள் UCAN செய்திக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
சனவரி 15 முதல் 19 முடிய திருத்தந்தை மேற்கொள்ளும் பயணத்தின் முக்கிய நோக்கம், வறியோருக்கும், இயற்கைப் பேரிடர்களால் துன்புறுவோருக்கும் ஆறுதலும் உதவிகளும் வழங்குவதே என்று அருள் பணியாளர் Pascual அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : UCAN








All the contents on this site are copyrighted ©.