2014-11-20 16:15:09

திருத்தந்தை பிரான்சிஸ் : பழக்கமான வழிகளில் சுகம் கண்டுவிட்டதால், இறைவனின் வரவை ஏற்றுக்கொள்ள எருசலேம் அஞ்சியது


நவ.20,2014. நமக்குத் தெரிந்த பழக்கமான விடயங்களைக் கையாள்வதில் நாம் பாதுகாப்பாக உணர்கிறோம்; இறைவனின் வரவு நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதால், அதனைக் கையாள்வதற்குத் தயங்குகிறோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இவ்வியாழன் காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலியாற்றிய வேளையில், எருசலேமைப் பார்த்து இயேசு கூறிய வார்த்தைகளை தன் மறையுரையின் மையப்பொருளாகப் பகிர்ந்தார்.
எருசலேம் நகரம் தனக்குத் தெரிந்த, பழக்கமான வழிகளில் சுகம் கண்டுவிட்டதால், இறைவனின் வரவை ஏற்றுக்கொள்ள அந்நகரம் அஞ்சியது என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
எருசலேம் நகருக்கு இயேசு கொணர்ந்த அமைதியைப் புரிந்துகொள்வதற்கு அஞ்சி, அந்நகரம் தன் கதவுகளை மூடிக்கொண்டதைக் கண்டு இயேசு கண்ணீர் வடித்ததையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் குறிப்பிட்டார்.
கோவிலையும், அதில் நிகழும் சடங்குகள், பலிகள் இவற்றையும் மையப்படுத்தி, பாதுகாப்பாக வாழ்ந்த எருசலேம் போலவே, இன்றையத் திருஅவையும் தனக்குப் பழக்கமானச் செயல்பாடுகளில் பாதுகாப்பு உணர்வை அடைவது ஆபத்து என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
இயேசு தன் அமைதியுடன் வரும்போது, அவரைப் பெற்றுக்கொள்வதால் நாம் அடையும் ஆனந்தத்தை நம்மால் சமாளிக்க முடியாமல் திண்டாடுகிறோம் என்றுரைத்த திருத்தந்தை, மனமாற்றம் என்பது, இறைவன் நம் வாழ்வை நடத்திச் செல்ல அனுமதிப்பதே என்று தன் மறையுரையில் வலியுறுத்தினார்.
மேலும், "நமது கிறிஸ்தவ அழைப்பிற்கேற்ற முறையில் வாழ்வதற்குரிய வழியைத் தேடுவோமாக" என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று தன் Twitter செய்தியாக வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.