2014-11-20 16:07:51

திருத்தந்தை : தொழில் திறமையுடனும், மனிதாபிமான உணர்வுகளுடனும் செயல்படும் FAO ஊழியர்களுக்கு பாராட்டு


நவ.20,2014. உலகின் வளங்களைப் பெருக்கவும், உலகச் செல்வங்களைப் பகிரவும், ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனமான, FAOவைச் சேர்ந்தவர்கள், அமைதியாக ஆற்றிவரும் பணியை, தான் மனதாரப் பாராட்டுவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இவ்வியாழன் காலை, உரோம் நகரில் FAO நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் உரையாற்றியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன்பின், FAO ஊழியர்களை தனிப்பட்ட வகையில் சந்தித்து, தன் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்தார்.
எந்த ஒரு நிறுவனத்திலும் தொழில் திறமையுடன் செயலாற்றுவது முக்கியம் என்றாலும், மனிதாபிமான உணர்வுகளுடனும் செயல்படுவது அவசியம் என்று கூறியத் திருத்தந்தை, தொழில் திறமை, மனிதாபிமான உணர்வுகள் இரண்டும் FAO ஊழியர்களிடம் இருப்பதைக் காணமுடிகிறது என்று எடுத்துரைத்தார்.
FAO ஊழியர்கள் ஆற்றும் பணி, சவால்கள் நிறைந்த பணியென்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவைகள், தடைகள் வரும்போது அவற்றை வெல்லும் துணிவும், தொடர்ந்து செயலாற்றும் தளரா மனமும் அவர்களுக்கு இறைவன் தரவேண்டும் என்ற வேண்டுதலையும் ஆசீரையும் அவர்களுக்கு வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.