2014-11-20 16:15:46

ஈராக்கில் வாழும் கிறிஸ்தவர்கள் அரேபிய கலாச்சாரத்திற்கு ஆற்றியுள்ள பணிகளை வரலாறு மறக்காது - முதுபெரும் தந்தை லூயிஸ் சாக்கோ


நவ.20,2014. மத்தியக் கிழக்குப் பகுதியில் அதிக ஆண்டுகளாக காயப்பட்டு வரும் ஈராக் நாட்டின் வரைப்படத்தைக் கையில் ஏந்தி, இஸ்லாமிய உடன்பிறப்புக்களாகிய உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன் என்று கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, இரபேல் லூயிஸ் சாக்கோ அவர்கள் கூறினார்.
நவம்பர் 17, இத்திங்கள் முதல், இப்புதன் முடிய ஆஸ்திரியா நாட்டின் தலைநகரான வியென்னாவில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் இப்புதனன்று உரையாற்றிய முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், கூடியிருந்த அனைத்து இஸ்லாமியர்களின் மனசாட்சியைத் தட்டியெழுப்ப வந்துள்ளதாகக் கூறினார்.
சவூதி அரேபியா, ஆஸ்திரியா, இஸ்பெயின் ஆகிய நாடுகள் இணைந்து King Abdullah Bin Abdulaziz அவர்களின் பெயரால் வியென்னாவில் உருவாக்கியுள்ள KAICIID, (the King Abdullah Bin Abdulaziz International Centre for Interreligious and Intercultural Dialogue) என்ற பன்னாட்டு உரையாடல் மையத்தில் உரையாற்றிய முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், உலகெங்கும் உள்ள நடுநிலையான இஸ்லாமியர் அனைவருக்கும் தான் வேண்டுகோள் விடுப்பதாகக் கூறினார்.
Mosul நகரிலும், Nineveh பள்ளத்தாக்கிலும், கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெற்றுள்ள, இன்னும் தொடர்ந்து நடைபெற்றுவரும் கொடுமைகள் உலக இஸ்லாமியர் அனைவரின் மனசாட்சியைத் தட்டி எழுப்ப வேண்டும் என்று முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் கேட்டுக் கொண்டார்.
ஈராக்கில் வாழும் கிறிஸ்தவர்கள் பல நூற்றாண்டுகளாக அங்கு வாழ்ந்தவர்கள் என்றும், அரேபிய கலாச்சாரத்திற்கு அவர்கள் ஆற்றியுள்ள பணிகளை வரலாறு மறக்காது என்றும் ஈராக் ஆயர்கள் அவையின் தலைவரான முதுபெரும் தந்தை லூயிஸ் சாக்கோ அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.