இந்தியாவில் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் ஒருவரை ஒருவர் மதிக்கவும்,
ஒன்றிணைந்து உழைக்கவும் முன்வர வேண்டும் - Vasaiபேராயர்
நவ.20,2014. இந்தியாவில் சிறுபான்மையினராக இருக்கும் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் ஒருவரை
ஒருவர் மதிக்கவும், ஒன்றிணைந்து அனைத்து மனிதர்களின் விடுதலைக்குப் பாடுபடவும் முன்வர
வேண்டும் என்று இந்திய ஆயர் ஒருவர் கூறினார். பல்சமய உரையாடல் மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு
பணியாற்றும் ஆசிய ஆயர் பேரவை பணிக்குழுவின் தலைவரும், Vasai உயர்மறை மாவட்டத்தின் பேராயருமான
Felix Machado அவர்கள், ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியொன்றில், கிறிஸ்தவ, இஸ்லாமிய உறவின்
அவசியம் பற்றி எடுத்துரைத்தார். இந்தியாவின் சிறுபான்மையினராக இருக்கும் கிறிஸ்தவர்களும்,
இஸ்லாமியரும் இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 15 கோடி என்பதைக் குறிப்பிட்ட பேராயர் Machado
அவர்கள், இந்தியாவில் கல்விப்பணியை நோக்கும்போது, இவ்விரு மதத்தினரும் நடத்தும் கல்வி
நிலையங்கள் மொத்த கல்வி நிலையங்களில் 17 விழுக்காடு உள்ளது என்று குறிப்பிட்டார். கிறிஸ்தவ
மற்றும் இஸ்லாமிய தலித் குழுவினர் எவ்வித சலுகைகளையும் அரசிடமிருந்து பெறுவது கிடையாது
என்பதையும் சுட்டிக்காட்டிய பேராயர் Machado அவர்கள், இரு மதத்தினரும் இணைந்து செயலாற்றினால்,
இன்னும் அதிக நன்மைகள் இருவருக்கும் விளையும் என்று குறிப்பிட்டார்.