2014-11-19 16:35:47

அன்னியர்அனைவரும் நம் அயலவர் என்பதை விவிலியம் வலியுறுத்தி வந்துள்ளது - கர்தினால் வேலியோ


நவ.19,2014. சமுதாயம், பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், மதம் என்று மனித வாழ்வின் அனைத்து அம்சங்களையும் பாதிக்கும் ஓர் உண்மையாகத் திகழ்வது புலம்பெயர்தல் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
நவம்பர் 17, இத்திங்கள் முதல், 21, இவ்வெள்ளி முடிய உரோம் நகரின் உர்பானியா பாப்பிறைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றுவரும் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில், புலம்பெயர்ந்தோர், மற்றும் பயணிப்போர் மேய்ப்புப்பணியில் ஈடுபட்டுள்ள திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் அந்தோனியோ மரிய வேலியோ அவர்கள் உரையாற்றுகையில், இவ்வாறு கூறினார்.
'புலம்பெயர்ந்தோர்' என்ற வார்த்தையின் கருவாக 'அன்னியர்' என்ற வார்த்தை அமைந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் வேலியோ அவர்கள், 'அன்னியர்' அனைவரும் நம் ‘அயலவர்’ என்பதை விவிலியம் வலியுறுத்தி வந்துள்ளது என்று கூறினார்.
கத்தோலிக்கர்கள் மட்டுமல்லாமல், கிறிஸ்தவ சபைகள், ஆர்த்தடாக்ஸ் சபையினர் மற்றும் திருப்பீடத்துடன் தொடர்பு கொண்டுள்ள அனைத்து நாடுகளின் தூதர்கள் பலரும் கலந்துகொண்டுள்ள இந்தப் பன்னாட்டு கருத்தரங்கு வருகிற வெள்ளிக்கிழமை நிறைவடைகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.