2014-11-19 16:34:17

புதிய புனிதர்கள் - பாகம் 1


அன்பு நேயர்களே, இம்மாதம் 23ம் தேதி கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் அருளாளர்கள் Nicholas Longobardi, சவாரா குரியாக்கோஸ், Amatus Ronconi, அருள்சகோதரி யூப்ராசியா, Giovanni Antonio Farina, Ludovico ஆகியோரை புனிதர்கள் என அறிவிக்கவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அருளாளர் Giovanni Antonio Farina


அருளாளர் Giovanni Antonio Farina அவர்கள், இத்தாலிய கத்தோலிக்க ஆயராவார். 1803ம் ஆண்டு சனவரி 11ம் தேதி பிறந்த Farina, தனது 15ம் வயதில் விச்சென்சாவில் குருத்துவக் கல்லூயில் சேர்ந்தார். இவர் தனது 21வது வயதில் குருத்துவக் கல்லூயில் போதிக்கத் தொடங்கினார். அங்கே 18 ஆண்டுகள் செலவிட்டார். 1831ம் ஆண்டில் விச்சென்சாவில் ஏழைச் சிறுமிகளுக்கென முதல் பள்ளிக்கூடத்தைக் கட்டினார். 1836ல் புனித டாரத்தி போதிக்கும் சகோதரிகள் சபையை நிறுவினார். 1850ம் ஆண்டில் ஆயராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார் ஃபரினா. 1860ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி விச்சென்சா ஆயரானார். ஆயர் ஃபரினா, 1888ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி காலமானார். 2010ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி, திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்கள், இவரை அருளாளராக உயர்த்தினார்.
இவரது விழா நாள் நவம்பர் 4.

அருளாளர் Ludovico

இத்தாலியரான Ludovico(லூயிஸ்) அவர்கள், 1814ம் ஆண்டு இத்தாலியின் நேப்பில்ஸ் நகருக்கு அருகில் Casoria என்ற சிறிய ஊரில் பிறந்தார். பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த இவர், புகழ்பெற்ற சமூகச் சீர்திருத்தவாதி. மேலும், "Gray பிறரன்பு அருள்பணியாளர்கள் சபை", "புனித எலிசபெத் Gray அருள்சகோதரிகள் சபை" என, இரு துறவு சபைகளைத் தோற்றுவித்தவர் இவர். Arcangelo Palmentieri என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், இளவயதில் அறைகள் கட்டும் வேலை செய்தார். 1832ம் ஆண்டு ஜூலை முதல் தேதியன்று Friars Minor என்ற பிரான்சிஸ்கன் துறவு சபையில் சேர்ந்த இவர், குருவாக திருப்பொழிவு செய்யப்பட்ட உடனே, Naplesல் தூய பேதுரு பிரான்சிஸ்கன் சபை இல்லத்தில் அச்சபையின் இளம் உறுப்பினர்களுக்கு மெய்யியல் மற்றும் கணிதப் பாடங்களைக் கற்பிக்கத் தொடங்கினார். லூடோவிக், தனது வாழ்நாள் முழுவதும் மருந்தகங்களையும், கருணை இல்லங்களையும் தொடங்கி ஏழைகள் மற்றும் தேவைப்பட்டவர்களுக்கு உதவி வந்தார். 1852ம் ஆண்டில் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையடைந்த ஆப்ரிக்கச் சிறுவர், சிறுமிகளுக்காக பள்ளி ஒன்றை ஆரம்பித்தார். அதோடு, காது கேளாதவர்கள், வாய் பேச இயலாதவர்கள் ஆகியோருக்காகவும் கல்வி நிறுவனங்களை ஆரம்பித்தார். அவரது சபையின் வயதான துறவிகளுக்கும் பணி செய்து வந்தார் லூடோவிக். இவர் தனது தலைவர்களின் ஆலோசனையின்பேரில், தனது பணியை நம்பிக்கையுள்ள பிறரிடம் ஒப்படைத்தார். 1859ம் ஆண்டில் பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை என்ற துறவு சபையை San Pietroவில் ஆண்களுக்குகெனத் தொடங்கினார். இச்சபையினரே "Gray பிறரன்பு அருள்பணியாளர்கள் சபை" என்று அழைக்கப்பட்டது. காரணம், இவர்கள் ஆடையின் நிறம் சாம்பல் நிறத்தாலானது. இதற்கு மூன்றாண்டுகள் கழித்து பெண்களுக்கென, "புனித எலிசபெத் Gray அருள்சகோதரிகள் சபை"யையும் தொடங்கினார். ஹங்கேரி நாட்டு புனித எலிசபெத்தின் பாதுகாவலில் இச்சபையை அர்ப்பணித்தார். ஏனெனில் புனித பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையின் முதல் உறுப்பினர்களில் ஒருவர் ஹங்கேரி நாட்டு புனித எலிசபெத். இந்த அருள்பணியாளர்கள் சபை 1877ம் ஆண்டில், திருப்பீடத்தின் அங்கீகாரம் பெற்றது. இச்சபையினரின் பணி அமெரிக்க ஐக்கிய நாட்டில் பரவியது. ஆனால் இதன் உறுப்பினர்கள் குறைந்ததால், 1971ம் ஆண்டில் இச்சபையை திருப்பீடம் கலைத்தது. ஆயினும், புனித எலிசபெத் Gray அருள்சகோதரிகள் சபை, இத்தாலி, அமெரிக்க ஐக்கிய நாடு, எத்தியோப்பியா, இந்தியா, பானமா, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளில் பரவியுள்ளது. அருளாளர் லூடோவிக் இறப்பதற்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் கடும் நோயால் தாக்கப்பட்டார். இறுதியில், 1885ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி காலமானார் அருளாளர் லூடோவிக். இவர் 1993ம் ஆண்டு திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்களால் அருளாளராக உயர்த்தப்பட்டார்.








All the contents on this site are copyrighted ©.