2014-11-19 16:36:22

நியூயார்க் நகர் ஐ.நா. தலைமையகத்தில் அசிசி நகர் புனித பிரான்சிஸ் கண்காட்சி


நவ.19,2014. அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்கள் கொண்டிருந்த பல விழுமியங்கள், ஐக்கிய நாடுகள் அவை போற்றிவரும் விழுமியங்களை ஒத்ததாய் உள்ளன என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா.தலைமையகத்தில், "சகோதரர் பிரான்சிஸ்: வார்த்தைகள், உருவங்கள்" என்ற தலைப்பில், இத்திங்களன்று ஒரு கண்காட்சி துவக்கப்பட்டது.
ஐ.நா. அலுவலகங்களில் திருப்பீடத்தின் சார்பில் பணியாற்றும் பேராயர் Bernadito Auza அவர்கள், இக்கண்காட்சியின் திறப்பு விழாவில் உரையாற்றுகையில், புனித பிரான்சிஸ் அவர்கள், அமைதி, இயற்கைச் சூழல் பாதுகாப்பு ஆகிய விழுமியங்களைக் கொண்டிருந்த புனிதர் என்று எடுத்துரைத்தார்.
புனித பிரான்சிஸ் அவர்கள் வாழ்வுடன் தொடர்புகொண்ட பல பழமைவாய்ந்த கைப்பிரதிகள், ஓவியங்கள் ஆகியவை இடம்பெறும் இக்கண்காட்சியை உருவாக்க, திருப்பீடம் எடுத்துக்கொண்ட கடினமான முயற்சிகள் குறித்தும் பேராயர் Auza அவர்கள் குறிப்பிட்டார்.
அமைதி, இயற்கை மீது காட்டும் மரியாதை போன்ற உயர்ந்த பண்புகள், புனித பிரான்சிஸ் அவர்களுக்கும், ஐ.நா.அவைக்கும் பொதுவான பண்புகள் என்று சுட்டிக்காட்டிய பேராயர் Auza அவர்கள், இத்தகையப் பண்புகள் மறையும்போது, போரும், வன்முறையும் வளர்கின்றன என்று வருத்தத்துடன் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.