2014-11-19 16:34:39

"நான்" என்ற தன்னிறைவில் நம்பிக்கை கொள்ளும் ஆபத்தை இன்றைய உலகம் உருவாக்கி வருகிறது - கர்தினால் Müller


நவ.19,2014. உலகில் பிறக்கும் எந்த ஒரு மனிதரும் தன்னிலேயே முழுமையும், நிறைவும் அடையமுடியாது; ஒவ்வொருவரின் முழுமைக்கு, அடுத்தவர் தேவை என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
‘ஆண் பெண் உறவு ஒன்றையொன்று நிறைப்பது’ என்ற மையக்கருத்துடன் நவம்பர் 17, இத்திங்கள் முதல், 19 இப்புதன் முடிய வத்திக்கானில் நடைபெற்ற ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் உரையாற்றிய, விசுவாசக் கோட்பாட்டுப் பேராயத்தின் தலைவர் கர்தினால் Gerhard Müller அவர்கள் இவ்வாறு கூறினார்.
"நான்" என்ற தன்னிறைவில் நம்பிக்கை கொள்ளும் ஆபத்தை இன்றைய உலகம் உருவாக்கி வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் Müller அவர்கள், இந்தத் தவறிலிருந்து விடுபட்டு, நாம் ஒருவரை ஒருவரைச் சார்ந்திருப்பதையும், இறைவனைச் சார்ந்திருப்பதையும் உணர்வது அவசியம் என்று கூறினார்.
ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே நிலவும் அடிப்படை வேற்றுமைகளை ஒருவரை ஒருவர் நிறைவு செய்யும் வேற்றுமைகளாகக் காணும்போது, இறைவனை நோக்கி நாம் மேற்கொள்ளும் வாழ்வுப் பயணம் முழுமை பெறுகிறது என்று கர்தினால் Müller அவர்கள், தன் உரையில் வலியுறுத்தினார்.
"ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருப்பதை உணரும் நாம், தெய்வீக மறைபொருளை உணர்வோம்" என்ற தலைப்பில், நடைபெற்ற இக்கருத்தரங்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் இத்திங்களன்று துவக்கப்பட்டு, இப்புதனன்று நிறைவுக்கு வந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.