2014-11-19 16:13:07

நவ.20,2014. புனிதரும் மனிதரே : துறவு இல்லங்களைச் சீரமைத்த இசைப்பிரியர்


பிரான்ஸ் நாட்டின் செல்வக் குடும்பத்தில் 878ம் ஆண்டு பிறந்த புனித ஓடோ, பாரீசில் பல ஆண்டுகள் கல்வி கற்பதில் செலவிட்டார். இவரின் ஆர்வம் இசை மீதானதாக இருந்தது. குளினி சபையைத் துவக்கிய பெர்னோ என்பவரின் கீழ், இச்சபையில் சேர்ந்து 909ல் குருவான ஓடோ, Baume துறவு இல்லப் பள்ளியின் இயக்குனராக பெர்னோவாலேயே நியமிக்கப்பட்டார். பெர்னோவின் இறப்பிற்குப் பிறகு ஓடோ அச்சபையை பொறுப்பேற்று வழிநடத்தினார். இவர் சபைத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர், ஏராளமானோர் அச்சபையில் சேர்ந்தனர். இவர் தன் பதவிகாலத்தில் பல துறவு இல்லங்களைக் கட்டினார்.
மிக எளிமையான வாழ்வை மேற்கொண்ட இவரை, அச்சபை குருக்கள் அனைவரும் முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டனர். துறவு இல்லங்களில் பல சீர்திருத்தங்களைக் கொணர்ந்தார் ஓடோ. 931ல் திருத்தந்தை 11ம் ஜான், வட பிரான்ஸ் மற்றும் இத்தாலியின் துறவுமடங்களை சீரமைக்கும் அதிகாரத்தை இவருக்கு அளித்தார். ஆளுநர்களிடையே மோதல்கள் ஏற்பட்டபோது, அமைதி ஏற்படுத்த உதவினார். மேலும், சட்டவிரோதமாக துறவுமடங்களை தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருந்த மன்னர்களுடன் பேசி, அந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டார். ஆலய இசைகளில் ஆர்வம் கொண்டிருந்த இவர், திருப்பலிப் பாடல்கள் பலவற்றை உருவாக்கியுள்ளார். இவரால் உருவாக்கப்பட்ட பாடல்கள் இன்றுவரை திருஅவையில் பாடப்பட்டு வருகின்றன. இவர் பிரான்சு நாட்டு மக்களால் "புகழ்பெற்ற இசைக்கலைஞர்" என்று அழைக்கப்பட்டார்.
உரோமைக்குச் செல்லும் வழியில் பிரான்சின் Tours நகரில் 942ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் தேதி இறைபதம் சேர்ந்தார், புனித ஓடோ.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.