2014-11-19 16:08:17

திருத்தந்தையின் புதன் பொதுமறையுரை


நவ.19,2014. இத்தாலி முழுவதையும் அச்சுறுத்தி வந்த மழை தற்போது ஓரளவு அமைதி காக்க, உரோம் நகரும் புதனன்று மழையின் அடையாளமின்றி சூரியக் கதிர்களை வீசிக்கொண்டிருந்தது, பார்க்கவே மனதிற்கு இதமாக இருந்தது. உரோம் நகர், புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகமும் மக்கள் கூட்டத்தால் நிரம்பிவழிய, புனிதத்துவத்திற்கென அனைத்துச் சமூகங்களுக்கும் விடப்படும் அழைப்புக் குறித்து தன் புதன் மறைபோதகத்தை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருமுழுக்கு எனும் அருளடையாளத்திற்காக நன்றி கூறுவோம். அந்தத் திருமுழுக்கின் அழைப்பை திருஅவையில் உள்ள ஒவ்வொருவரும் பகிர்கிறோம். நாம் ஒவ்வொருவரும் திருமுழுக்கின்வழி புனிதராக அழைக்கப்பட்டுள்ளோம். அனைத்திற்கும் மேலாக, புனிதத்துவம் என்பது இறைவனின் கொடை. அது நம் வெற்றியின் மூலம் கிட்டுவதல்ல. கடவுள், திருஅவையை அன்புகூர்ந்து அத்திருஅவைக்காக, அதனைப் புனிதமடையச் செய்வதற்காக தன்னையேக் கையளித்தார் என தூய பவுல் கூறுகிறார். திருஅவையின் ஒன்றிப்பில் நாம் ஒவ்வொருவரும் திருமுழுக்கின் அருளால் புனிதப்படுத்தப்பட்டு, அந்த புனிதத்துவத்தில் வளர அழைப்புப் பெறுகிறோம். வாழ்வின் எந்நிலையில் நாம் இருந்தாலும், நம் தினசரி வாழ்வை நன்முறையில் வாழ்ந்து, நம் பல்வேறு கடமைகளை, இறைவனுடனும், நம் சகோதர சகோதரிகளுடனும் கொள்ளும் ஒன்றிப்பில் நிறைவேற்ற அழைக்கப்படுகிறோம். இந்த அழைப்புக்கு நாம் எவ்விதத்தில் பதிலுரை வழங்கியுள்ளோம் என இன்று நாம் நமக்குள்ளேயே கேள்வி எழுப்புவோம். நம் தினசரி வாழ்வில் நாம் புனித வாழ்வை மேற்கொள்ளவேண்டும் என இயேசு நம்மை அழைப்பதன் மூலம், அனைத்திலும் ஆழமான மகிழ்வை நாம் அனுபவிக்கவும், நம்மைச் சுற்றியிருப்போருக்கு அன்பின் கொடையாக நாம் மாறவும் நம்மிடம் அவர் எதிர்பார்க்கிறார். புனிதத்துவத்தில் வளர்வது என்பது, மேலும் நல்லவர்களாக வளர்வதைக் குறிக்கிறது. அதாவது, சுயநலமற்றவர்களாகவும், தான் மட்டுமே பெரிதென எண்ணாதவர்களாகவும், எப்போதும் திருஅவைக்குள், சகோதர சகோதரிகளுக்கு பணிவிடை புரிபவர்களாகவும் இருப்பதைக் குறிக்கிறது. இறைவன் வழங்கும் பல்வேறு கொடைகளில் நல்லப் பணியாளர்களாக நாம் செயல்படுவோம்.
இவ்வாறு, தன் புதன் மறைபோதகத்தை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் மாதத்தின் திருப்பலிக் கொண்டாட்டங்கள், உயிரிழந்த ஆன்மாக்களுக்காக செபிக்க அழைப்புவிடுப்பதை நினைவூட்டினார். மேலும், இத்தாலியின் லிகூரியா மாவட்டத்திலும் வட இத்தாலியின் பல பகுதிகளிலும் அண்மை பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தன் ஒருமைப்பாட்டை வெளியிட்டதுடன், அவர்களுக்காக செபிக்குமாறும் அழைப்புவிடுத்தார். இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.