2014-11-19 16:33:03

ஆசியத் திருஅவை, பெயர் தெரியாத பல்லாயிரம் மறைசாட்சிகளை தாய் திருஅவைக்கு வழங்கியுள்ளது - கர்தினால் தாக்லே


நவ.19,2014. எண்ணிக்கையில் சிறுபான்மையாக உள்ள ஆசியத் திருஅவை, அகில உலகத் திருஅவைக்கு பல மறைசாட்சிகளை வழங்கியுள்ளது என்பது, ஆசியத் திருஅவையின் சக்தி என்று கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் கூறினார்.
“ஆசியாவில் மறைபரப்புப்பணி: திருத்தந்தை 2ம் ஜான்பால் முதல், திருத்தந்தை பிரான்சிஸ் வரை” என்ற தலைப்பில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் இச்செவ்வாயன்று உரையாற்றிய மணிலா பேராயர் கர்தினால் தாக்லே அவர்கள், எண்ணிக்கையில் குறைவாக உள்ள ஆசியத் திருஅவை, பெயர் தெரியாத பல்லாயிரம் மறைசாட்சிகளை தாய் திருஅவைக்கு வழங்கியுள்ளது என்று கூறினார்.
சிறுபான்மை என்ற வலுவற்ற நிலையில் ஆசியத் திருஅவை பல்வேறு துன்பங்களைத் தாங்கிவந்தாலும், வலுவற்ற நிலை, துன்பம் ஆகிய அம்சங்கள் நம்பிக்கை என்ற சக்தியைத் தருகின்றது என்று கூறிய கர்தினால் தாக்லே அவர்கள், பிலிப்பின்ஸ் நாட்டு கிறிஸ்தவர்கள் சந்தித்துவரும் இயற்கைப் பேரிடர்களை சிறப்பாகச் சுட்டிக்காட்டினார்.
வறியோர், நம்பிக்கையைச் சொல்லித்தரும் சிறந்த ஆசிரியர்கள் என்றும், அவர்களின் பற்றுறுதி, மற்றும் துணிவு ஆகியவற்றின் உதவியால், அவர்கள் ஒளிர்விடும் சாட்சிகள் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிவருவதை எடுத்துரைத்த கர்தினால் தாக்லே அவர்கள், வறியோரின் எண்ணிக்கை ஆசியக் கண்டத்தில் பெருமளவில் உள்ளது என்று குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.