அமைதி ஆர்வலர்கள் : 1962ல் நொபெல் அமைதி விருது(Linus Carl Pauling)
நவ.19,2014. மனிதகுல முன்னேற்றத்திற்காக மனிதர் உழைக்கின்ற இடமே உயர்ந்த கோயில் எனச்
சொல்வார்கள். மனிதகுல நலத்துக்காக உழைப்பவர்களுக்கு உயரிய விருதுகள் வழங்கி பெருமைப்படுத்தி
ஊக்குவித்து வருகிறது உலகம். இந்த உன்னத மனிதர்கள் பற்றி இத்தொடரில் நாம் சுருக்கமாக
அறிந்துவருகிறோம். இவர்களில் மேரி கியூரி(Marie Curie), ஜான் பார்டீன்(John Bardeen),
பிரடெரிக் சேனர்(Frederick Sanger), லீனுஸ் கார்ல் பாலிங் ஆகிய நால்வர் இரண்டு முறை இவ்விருதுகளைப்
பெற்றுள்ளனர். இரண்டு வெவ்வேறு துறைகளில் இவ்விருதுகளைப் பெற்ற இருவரில் ஒருவர் லீனுஸ்
கார்ல் பாலிங். மற்றொருவர் மேரி கியூரி. இவர், 1911ம் ஆண்டின் நொபெல் வேதியியல் விருதையும்,
1903ம் ஆண்டின் நொபெல் இயற்பியல் விருதையும் பெற்றுள்ளார். பாரிஸ் பல்கலைக்கழகத்தின்
முதலாவது பெண் பேராசிரியராகிய இவரது வழிகாட்டுதலின்கீழ், கதிரியக்க ஐசோடோப்புகளைப் பயன்படுத்தி
உடற்கட்டிகளைக் குணப்படுத்த உலகிலேயே முதன்முறையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேரி க்யூரி
அவர்கள், அவரது காலத்தில் இரண்டு நொபெல் விருதுகளைப் பெற்ற முதல் நபராகவும் இருந்தார்.
லீனுஸ் கார்ல் பாலிங் அவர்கள், 1954ம் ஆண்டின் நொபெல் வேதியியல் விருதைப் பெற்றதோடு,
1962ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதையும் பெற்றார். லீனுஸ் கார்ல் பாலிங் (Linus Carl
Pauling) அவர்கள், ஓர் அமெரிக்க வேதியலாளரும் உயிரி வேதியலாளரும் அமைதி ஆர்வலரும், எழுத்தாளரும்
கல்வியாளருமாவார். வரலாற்றில் வேதியியலில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நபர்களில் ஒருவராக
மதிக்கப்படும் இவர், 20ம் நூற்றாண்டின் மிக முக்கிய அறிவியலறிஞர்கள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளார்.
பாலிங் அவர்கள், குவாண்டம் வேதியியல், உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் ஆகிய துறைகளைத்
தொடங்கியவர்களில் ஒருவராகவும் உள்ளார். அறிவியல்துறையில் மூலக்கூறுகளின் அமைப்பையும்,
வேதியல் பிணைப்புகளையும் கண்டறிந்ததற்காக வேதியியலுக்கான நொபெல் விருதையும், ஆணுஆயுதக்
குறைப்புகளுக்கான ஆதரவு இயக்கத்தைத் தொடங்கி அமைதிக்கான நடவடிக்கையில் இவர் காட்டிய ஈடுபாடுகளுக்காக,
அமைதிக்கான நொபெல் விருதையும் பெற்றுள்ளார் பாலிங். ஆர்த்தோமாலிக்குலர் மருத்துவம், நோய்களின்
சிகிச்சைக்கென மிக அதிக அளவில் வைட்டமின் சத்துக்களைக் கொடுத்து சிகிச்சை அளிக்கும் மேகாவிட்டமின்
சிகிச்சை, உணவில் போதுமான அளவு ஊட்டச்சத்துக்களைச் சேர்க்கும் உணவுத் திட்டங்கள், வைட்டமின்
சி சத்துக்களை அதிகளவில் சேர்த்தல் ஆகியவற்றை ஊக்குவித்து வளர்த்தவர் பாலிங். அமெரிக்க
ஐக்கிய நாட்டின் போர்ட்லாந்தில் 1901ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி பிறந்த லீனுஸ் பாலிங்
அவர்கள், சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். தாய் லூசியின் அரவணைப்பில் வளர்ந்த இவர், தனது
ஒன்பதாவது வயதிலே புத்தக வாசிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இவரது நண்பர் Lloyd
A. Jeffress ஒரு சிறிய வேதியல் பரிசோதனைக்கூடத்தில் செய்துகாட்டிய ஒரு செய்முறையால் கவரப்பட்டு
தானும் ஒரு வேதியியலாளராக வேண்டுமென்று முதலில் திட்டமிட்டார். உயர்நிலைப்பள்ளியில் படித்தபோது,
பாலிங் அவர்கள், ஒரு கைவிடப்பட்ட இரும்பு தொழிற்சாலையிலிருந்து கருவிகளை எடுத்துவந்து
வேதியியல் செய்முறைகளைச் செய்து வந்தார். பின்னர் தனது பழைய நண்பர் Lloyd Simonடன் சேர்ந்து,
பாலிலிருந்து பாலாடைக்கட்டிகள், வெண்ணெய் தயாரிக்கும் ஒரு தொழிலகத்தைத் தொடங்கினார்.
ஆனால் மக்கள் இச்சிறுவர்களின் தயாரிப்பில் நம்பிக்கை வைக்காததால், இவர்களின் வியாபாரம்
படுத்தது. பாலிங், தனது 15வது வயதிலே 1916ம் ஆண்டில், Oregon மாநிலப் பல்கலைக்கழகத்தில்
சேரும் தகுதி பெற்றார். இங்கு இவர் சான்றிதழ் பெறுவதற்கு இரு வரலாற்றுப் பாடங்களை முடித்திருக்க
வேண்டும். அங்குப் படித்துக்கொண்டே அதையும் முடித்துவிடுவதாக இவர் வைத்த விண்ணப்பம் மறுக்கப்பட்டது.
எனவே உயர்நிலைப்பள்ளிச் சான்றிதழ் இன்றி வெளியேறினார். ஆனால் 45 ஆண்டுகள் கழித்து இவர்
இரு நொபெல் விருதுகளை வாங்கிய பின்னர் அச்சான்றிதழை மீண்டும் அப்பள்ளியிலிருந்து பெற்றார்
பாலிங். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள் பல விசைகளால் பிணைந்து வேதிப்பொருட்கள்
உருவாகின்றன. அணுக்களுக்கு இடையிலான இத்தகைய ஈர்ப்பு விசையே வேதியியல் பிணைப்பு என்று
அழைக்கப்படுகிறது. 1920களில் வேதியியல் பிணைப்பு (chemical bond) பற்றிய ஆராய்ச்சிகளை
வெளியிடத் தொடங்கினார் பாலிங். இதன் பயனாக, 1939ல் இவர் வெளியிட்ட புகழ்வாய்ந்த நூலே
இவருக்கு 1954ம் ஆண்டில் வேதியியலுக்கான நொபெல் விருதைப் பெற்றுக் கொடுத்தது. இரண்டாம்
உலகப் போர்வரை பாலிங் அவர்கள், அரசியலில் ஈடுபாடு காட்டாமல் இருந்தார். ஆனால் அதற்குப்
பின்னர், வேதியியல் சார்ந்த திட்டங்களில் பணிசெய்வதற்கு வந்த அழைப்புக்களைப் புறக்கணித்தார்.
போரின் விளைவுகளும், அவரது மனைவி Avaவின் அமைதிக்கான செயல்பாடும் இவரையும் அமைதி ஆர்வலராக
மாற்றியது. 1946ல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தலைமையில் நடந்த அணு அறிவியல் அறிஞர்கள் அவசரகாலக்
குழுவில் இவர் சேர்ந்தார். அணுஆயுதங்களின் வளர்ச்சியினால் ஏற்படும் அழிவுகளை மக்களுக்கு
எடுத்துச் சொல்வதே இக்குழுவின் பணியாகும். இதனால், இவர் இலண்டன் அறிவியல் கருத்தரங்கில்
1952ல் உரையாற்ற வேண்டியிருந்தபோது, இவருக்குக் கடவுச்சீட்டுத்தர மறுத்தது அமெரிக்க அரசு. ஆணுஆயுதப்
பரிசோதனைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்று 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட அறிவியல்
அறிஞர்களின் கையெழுத்தை இவரும் இவரது மனைவியும் பெற்று ஐ.நா.வில் 1958ம் ஆண்டில் சமர்ப்பித்தனர்.
இதனால் நிலத்திற்கு மேலே ஆணுஆயுதப் பரிசோதனைகள் செய்வதைத் தடை செய்யும் ஒப்பந்தம் 1963ல்,
கொண்டுவரப்பட்டது. இதில் ஜான் எப் கென்னடி, நிகிட்டா குருஷேவ் ஆகியோரும் கையெழுத்திட்டனர்.
இவருக்கு 1962ம் ஆண்டின் அமைதிக்கான நொபெல் விருதை அறிவித்த நார்வே குழு சொன்னது : “ஆணுஆயுதப்
பரிசோதனைகள், இந்த ஆயுதங்களைப் பயன்படுத்துதல், இவற்றின் பரவலைத் தடை செய்தல் ஆகிய இவற்றுக்கு
எதிராக மட்டுமல்லாமல், பன்னாட்டு மோதல்களைத் தீர்ப்பதற்கான வழியாக, அனைத்துச் சண்டைகளும்
நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக லீனுஸ் கார்ல் பாலிங் அவர்கள், 1946ம் ஆண்டுமுதல் அயராது
உழைத்துவருவதைப் பாராட்டி இந்த அமைதி விருது வழங்கப்படுகின்றது” என்று. லீனுஸ் கார்ல்
பாலிங் அவர்கள், 1994ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி கலிபோர்னியாவில் தனது 93வது வயதில் இறந்தார்.
இவர் 1931ம் ஆண்டுமுதல் 2008ம் ஆண்டுவரை, இரு நொபெல் விருதுகள், லெனின் அமைதிப் பரிசு(1968–69),லமனோசொவ்
தங்க விருது (1977) உட்பட 36 விருதுகளைப் பெற்றுள்ளார்.