2014-11-18 14:51:54

புனிதரும் மனிதரே - மனைவியாக, அன்னையாக, அரசியாக, புனிதராக...


11ம் நூற்றாண்டில் இங்கிலாந்து இளவரசியாக வாழ்ந்தவர் மார்கரேட். நார்மன் இனத்தைச் சேர்ந்தவர்கள் இங்கிலாந்தைக் கைப்பற்றியதும், இளவரசி மார்கரேட் அவர்கள், தன் தாய், மற்றும் சகோதரருடன் ஹங்கேரி நாட்டிற்குச் செல்ல கப்பலேறினார். புயலில் சிக்கிய கப்பல், ஸ்காட்லாந்து நாட்டின் கரையில் ஒதுங்கியது. மார்கரேட்டின் அழகும், குணமும் ஸ்காட்லாந்து அரசன் மால்கம் அவர்களைப் பெரிதும் கவர்ந்தன. 1070ம் ஆண்டு இருவரும் திருமணம் புரிந்தனர்.
மன்னர் மால்கம் இயல்பிலேயே நல்லவர் என்றாலும், அவருக்கும், அரசவையில் இருந்தவர்களுக்கும் படிப்பறிவில்லாத காரணத்தால், கீழ்த்தரமான பேச்சும் பழக்கவழக்கங்களும் கொண்டிருந்தனர். அரசி மார்கரேட் அவர்களுக்கு கல்வி புகட்ட ஆசிரியர்களைக் கொணர்ந்தார். தன் நடத்தையாலும், அறிவுரைகளாலும் மன்னருக்கும், மற்றவருக்கும் உயர்ந்த பழக்க, வழக்கங்களைக் கற்றுத்தந்தார். அரண்மனையில் ஏற்பட்ட மாற்றம், நாட்டிலும் பரவ ஆரம்பித்தது. ஸ்காட்லாந்து மக்கள் அனைவரும் கல்வி பயில்வதற்கு அரசி மார்கரேட் வழிவகுத்தார்.
நாட்டிலிருந்த கோவில்கள் அனைத்தையும் புதுப்பிப்பதில் அரசி மார்கரேட் அவர்கள், தனி ஆர்வம் காட்டினார். திருப்பலிக்கு அருள் பணியாளர்கள் அணியும் உடைகளில், தன் கைப்பட பூவேலைப்பாடுகள் செய்து கொடுத்தார், மார்கரேட்.
தவக்காலம், திருவருகைக்காலம் ஆகிய வழிபாட்டுக் காலங்களில் மன்னரும், அரசியும், கோவிலுக்குச் சென்று திரும்பும்போது, வழியில் சந்திக்கும் வறியோரின் காலடிகளைக் கழுவி, அவர்களுக்குத் தேவையான பொருள் உதவிகள் செய்தனர். இவ்விருவருக்கும் பிறந்த 8 குழந்தைகளை புண்ணிய வாழ்வில் வளர்ப்பதில் இருவரும் அதிக கவனம் செலுத்தினர்.
1093ம் ஆண்டு, மன்னர் மால்கம் அவர்களும், மூத்த மகன் எட்வர்ட் அவர்களும் போரில் இறந்தபோது, அரசி மார்கரேட் அவர்கள் ஆழ்ந்த வேதனை கொண்டார். அவர்கள் இறந்த நான்காம் நாள் மார்கரேட் அவர்களும் தன் 48வது வயதில் இறைவனடி சேர்ந்தார். இவர், 1250ம் ஆண்டு, திருத்தந்தை 4ம் இன்னொசென்ட் அவர்களால் புனிதராக உயர்த்தப்பட்டு, ஸ்காட்லாந்து நாட்டின் பாதுகாவலர் என்று அறிவிக்கப்பட்டார். ஸ்காட்லாந்து நாட்டு புனித மார்கரேட் (Saint Margaret of Scotland) அவர்களின் திருநாள், நவம்பர் 16ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.