2014-11-18 14:51:58

குடியேற்றதாரர் குறித்த ஏழாவது உலக கருத்தரங்கில் ஆயர் களத்திப்பரம்பில்


நவ.18,2014. நல்வாழ்வைத்தேடி வேறு நாடுகளுக்குக் குடிபெயரும் மக்களை அந்த நாடுகள் வரவேற்று அரவணைப்பது அவசியம் என்பதுபோல், அவர்களின் சொந்த நாட்டுத் திருஅவைக்கும், புதிய நாட்டுத் திருஅவைக்கும் இடையே ஒத்துழைப்பு இருக்கவேண்டியதும் அவசியம் என வலியுறுத்தினார் திருப்பீட அதிகாரி ஆயர் ஜோசப் களத்திப்பரம்பில்.
குடியேற்றதாரர் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான திருப்பீட அவையின் செயலர் ஆயர் களத்திப்பரம்பில் அவர்கள், குடியேற்றதாரர் குறித்த ஏழாவது உலக கருத்தரங்கில் துவக்க உரையாற்றியபோது இவ்வாறு குறிப்பிட்டார்.
நல்வாழ்வுத் தேடி வேறு நாடுகளில் மக்கள் குடியேறினாலும், இந்த குடியேற்றதாரர்கள், தாங்கள் புகுந்துள்ள புதிய நாட்டின் முன்னேற்றத்திற்காக தங்கள் பங்களிப்பை வழங்குவதுடன், தங்கள் சொந்த நாட்டின் வருவாய்க்கும் உதவுகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டினார் ஆயர் களத்திப்பரம்பில்.
இன்றைய உலகில் பெண் குடியேற்றதாரர்களின் எண்ணிக்கை 49 விழுக்காட்டை எட்டியுள்ளது என்பதையும் குறிப்பிட்ட ஆயர், இது குறித்தும் திருப்பீடத்தின் இக்கருத்தரங்கு விவாதிக்கும் என்றார்.
குடியேற்றதாரரின் மாண்பு பாதுகாக்கப்படவேண்டும் என்பது குறித்து இக்கருத்தரங்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் எனவும் தெரிவித்தார் ஆயர் களத்திப்பரம்பில்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.