2014-11-17 14:05:29

வாரம் ஓர் அலசல் – ஆக்கத்துக்குப் பயன்படுத்து உன் திறமைகளை..


நவ.17,2014 RealAudioMP3 . ப்ரெஞ்ச் பேரரசர் நெப்போலியன் சிறுவயதில் இராணுவ விடுதி ஒன்றில் தங்கி படித்துக்கொண்டிருந்தார். அச்சமயம், அவரோடு தங்கியிருந்த மற்றொரு மாணவனுடைய அழகான பை ஒன்று காணாமல் போய்விட்டது. உடனே அந்தச் சிறுவன் மேலதிகாரிகளிடம் முறையிட்டான். நெப்போலியன்மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறினான். உடனே அந்த அதிகாரி நெப்போலியனை தனது அறைக்குக் கூப்பிட்டார். உடனே ஒரு பிரம்பை எடுத்து, ஏன் திருடினே?, இனிமே இது மாதிரிச் செய்வியா அப்படின்னு கேட்டுக்கிட்டே கண்மண் தெரியாம அடித்தார். நெப்போலியன் எந்தப் பதிலும் சொல்லாமல் அவ்வளவு அடியையும் வாங்கிக்கொண்டார். அதற்குப் பிறகு கொடுத்த தண்டனையையும் அமைதியாகப் பெற்றுக்கொண்டார். சில நாள்கள் கழித்து புகார் கொடுத்த அந்தச் சிறுவன் அதிகாரியிடம் வந்து, ஐயா, அன்னிக்கு எனது பையை நெப்போலியன் திருடல, திருடினது வேறு ஒரு பையன், இப்பத்தான் உண்மை தெரிஞ்சது, என்னை மன்னிச்சிடுங்க என்றான். உடனே அந்த அதிகாரி நெப்போலியனைக் கூப்பிட்டார். ஏம்ப்பா... நான் உன்னை இந்த அடி அடிச்சேன், நீ பதிலே பேசல, அப்பவே உண்மையைச் சொல்லியிருக்கலாம்ல என்று கேட்டார். அதற்கு நெப்போலியன், ஐயா, நீங்க என்னை அடிக்கிறதுக்கு முன்னாடி கேட்டிருந்தா சொல்லியிருப்பேன். ஆனா, நீங்க அடிச்சிக்கிட்டே கேட்டீங்க, நான் அடிக்குப் பயந்துக்குட்டு, நான் அப்படிச் சொல்றதா நினைச்சுடுவீங்க. நான் பயந்ததாக யாரும் நினைக்கக் கூடாது. அதைவிட அடி வாங்கிறதுலே எனக்கு ஆட்சேபனை இல்லை என்று சொன்னதாக, நெப்போலியன் அவர்களின் குறிப்புகளில் உள்ளது.
நான் பயந்ததாக யாரும் நினைக்கக் கூடாது. இதைச் சொல்வதற்கு எத்தகைய மனத்திடம், மனஉறுதி வேண்டும். இந்த மனஉறுதியைத்தான் இன்றைய மாணவர் பலரில் பார்க்க முடிகிறது. மாணவர் அணி திரண்டுவிட்டால் எந்த ஓர் அரசும் பயப்படத்தான் செய்கிறது. 1989ம் ஆண்டில் சீனாவின் பெய்ஜிங் நகரின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர் அணி திரண்டதும், அதற்குப் பின்னர் நடந்த நிகழ்வுகளும் இன்னும் நம் நினைவுகளைவிட்டு மறையவில்லை. சீனா சனநாயக நாடாக மாற வேண்டும், தொழில், வர்த்தகம் ஆகியவை தாராளமயமாக்கப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பத்து இலட்சம் மாணவர்களும், பொதுமக்களும் அணி திரண்டனர். இப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர், பல்லாயிரக்கணக்கானோர் சிறைகளில் தள்ளப்பட்டனர். மேலும், கடந்த ஏழு வாரங்களாக ஹாங்காங்கில் சனநாயக உரிமைகளை வலியுறுத்தி, மாணவர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர். ஆயிரக்கணக்கான மாணவர்கள் குடில்களை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி ஏறக்குறைய எல்லா நாடுகளிலுமே மாணவர்கள் போராடி காரியங்களை சாதித்து வருகின்றனர்.
தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் வீரசோழபுரம் கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த 150க்கும் அதிகமான பள்ளி மாணவர்கள், கடந்த செவ்வாயன்று(நவ.11,2014) சாலை மறியலில் ஈடுபட்டு, அதிகாரிகளைத் தங்கள் கோரிக்கைகளுக்கு இணங்க வைத்துள்ளனர். தாங்கள் செல்வதற்குப் பேருந்து வராததால் வகுப்புக்குத் தாமதமாகச் செல்ல வேண்டியிருந்ததைச் சுட்டிக்காட்டி இம்மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கேட்டுக்கொண்டபடி மீண்டும் போக்குவரத்து செயல்படும் என, ஜெயங்கொண்டம் தாசில்தாரும், காவல்துறையும் உறுதி அளித்ததின் பேரில் மாணவர்கள், பொதுமக்கள் கலைந்து சென்றனர். அன்பர்களே, மாணவர்களால் ஆக்கவும் முடியும், அதேநேரம் அழிக்கவும் முடியும் என்பதற்குப் பல எடுத்துக்காட்டுக்களைக் குறிப்பிடலாம். சென்னையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த கல்லூரி மாணவர்கள் எட்டுப்பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஏழு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்ற செய்தியை இந்த நவம்பரில்தான் வாசித்தோம். கல்லூரி மாணவர்களிடையே கோஷ்டி மோதல்களும், கொலைகளும், இன்னும் பிற வன்செயல்களும் ஆங்காங்கே நடக்கின்றன. இளம் மாணவர்களின் திறமைகள் அழிவுக்கு அல்ல, ஆக்கத்திற்குப் பயன்படுத்தப்பட வேண்டும். “மாணவனே நிமிர்ந்து நில்! எதையும் துணிந்து சொல், துணிந்து செய், முடியும் என்று சொல் உனது செயல் முழுமை அடையும்வரை! முடியாது என்று சொல் அதர்மம் உன்துணை நாடும் நேரத்தில்!” (நன்றி எழுத்து.காம்) என்றுதான் சொல்ல விழைகிறோம். மாணவன் என்று இணைய பக்கங்களில் சொடுக்கியவுடன், பக்கம் பக்கமாய் விரியும் வார்த்தைகள், மாணவர்கள் உலகம் எத்துணை இனிமையானது, வளமையானது, எவ்வளவு நம்பிக்கைகளைக் கொண்டுள்ளது, எவ்வளவு எதிர்பார்ப்புக்களைத் தாங்கியுள்ளது என்றுதான் சிந்திக்கச் செய்கின்றது.
அதேநேரம் மாணவர்கள் குற்றக்கும்பல்களால் தாக்கப்படும் செயதிகள் நம்மைக் கவலைப்பட வைக்கின்றன. நாளைய நம்பிக்கைகள் தீயீட்டுக் கொளுத்தப்படுவது எத்துணை கொடூரம். மெக்சிகோவில் மாயமான 43 ஆசிரியர் பயிற்சி மாணவர்களை கடத்திய போதைப்பொருள் கும்பல் அவர்களைக் கொன்று குவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மெக்சிகோவின் Guerrero மாநிலத்தில், Ayotzinapaவில் இயங்கி வரும், Raúl Isidro Burgos ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் சிலர், ஒருதலைச் சார்பான பணி அமர்த்தல் விவகாரத்தைக் கண்டித்து போராட்டம் நடத்த முடிவு செய்து, அதற்காக நன்கொடை திரட்ட கடந்த செப்டம்பர் மாதம் 26ம் தேதி Iguala நகருக்குச் சென்றனர். அப்போது அவர்களுக்கும், காவல்துறைக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதால் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாகியதோடு, 43 மாணவர்கள் காணாமல் போயுள்ளனர். இம்மாணவர்களைச் சுட்டுக்கொன்று, அடையாளம் தெரியாமல் போவதற்காக தீயிட்டுக் கொளுத்தி, பின்னர் அந்த உடல்களை சாக்குப் பைகளில் போட்டு ஆற்றில் வீசியதாக, இவ்வழக்கில் கைதானவர்கள் தங்களின் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். மெக்சிகோவில் இதுவரை 22 ஆயிரம் பேர் காணாமல்போயுள்ளனர்.
1939ம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி இரண்டாம் உலகப் போர் ஆரம்பமானது. அவ்வாண்டின் அக்டோபர் 28ம் தேதி, முன்னாள் செக்கோஸ்லோவாக்கியா தலைநகர் Pragueல், சார்லஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அக்குடியரசு 1918ம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற நாளை நினைவுகூர்ந்து ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலத்தில் நாத்சிகளின் ஆக்ரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பொஹேமியாவிலும், மொராவியாவிலும் இருந்த ஜெர்மனியின் நாத்சி அதிகாரிகள் இந்த ஊர்வலத்தைத் தடை செய்ததோடு, மாணவர் தலைவர் Jan Opletal என்பவரை நவம்பர் 11ம் தேதி கொலை செய்தனர். அதோடு 1,200க்கு அதிகமான மாணவர்களை வதைப்போர் முகாம்களுக்கு அனுப்பினர். இன்னும், நவம்பர் 17ம் தேதி ஒன்பது மாணவர் தலைவர்களும், பேராசிரியர்களும் எவ்வித விசாரணையுமின்றி தூக்கிலிடப்பட்டுக் கொலைசெய்யப்பட்டனர். பின்னர் அக்குடியரசின் அனைத்துப் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் மூடப்பட்டன. நாத்சிப் படைகள் Prague பல்கலைக்கழகத்தின்மீது குண்டுகளை வீசின. எனவே நவம்பர் 17ம் தேதி அனைத்துலக மாணவர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இத்தினம், இலண்டனில், அனைத்துலக மாணவர் அவையினால் முதலில் 1941ம் ஆண்டில் கடைப்பிடிக்கப்பட்டது. மாணவர்கள் உள்ளூர் சமூகங்களுக்குச் செய்யும் நன்மைகளை நினைவுகூரும் விதமாக இந்த உலக நாள் சிறப்பிக்கப்படுகிறது. இந்த நாளில் வத்திக்கான் வானொலியும் தனது மாணவர் நேயர்களுக்கும் மற்ற மாணவர்களுக்கும் தனது நல்வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றது.
மாணவர்கள் எதையும் சாதிக்கத் துணியும் துடிப்பு மிக்கவர்கள். அவர்களில் புதைந்து கிடக்கும் திறமைகள் ஏராளம். தன்னிடம் இருக்கும் திறமைகளை ஆக்கத்திற்குப் பயன்படுத்த வேண்டுமென்றே இந்நாளில் கேட்கிறோம். எதற்கெடுத்தாலும் பேருந்து எரிப்பு, கடைகள் உடைப்பு போன்ற வன்முறைகள் வேண்டாம். திரைப்பட நாயகர்களின் கட்அவுட்களுக்குப் பாலாபிஷேகம் செய்து உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம், தலைவர்களுக்காகத் தீக்குளிக்க வேண்டாம். தேர்வில் அல்லது காதலில் தோல்வியடைந்தால் தூக்குமாட்ட வேண்டாம். உங்களை நம்பி உங்கள் குடும்பமும் சமூகமும், நாடும் இருக்கின்றது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கேட்டுக்கொண்டது போன்று,
உங்கள் திறமைகளை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?, அவற்றை வளர்க்கப் போகிறீர்களா? அல்லது பூட்டி வைக்கப் போகின்றீர்களா? கடவுள் உங்களுக்குக் கொடுத்துள்ள திறமைகளைப் பேணி வளர்த்து பிறரோடு அவற்றைப் பகிர்ந்து கொள்ளுங்கள். இல்லாவிடில் இத்திறமைகளை அளித்த கடவுளை நீங்கள் ஏமாற்றுவதாக இருக்கும். திறமைகளைக் கொடுத்த உங்கள் அன்புக் கடவுளை ஏமாற்றாதீர்கள். RealAudioMP3
மாணவர்களே, முன்னேற்ற பாதைகள் உங்கள் முன்னே படர்ந்து கிடக்கின்றன. அவற்றில் நீங்களாகத்தான் உருண்டோடி முன்னேற வேண்டும்! சாதி வேறுபாடு என்ற சாக்கடை உங்கள் உதிரத்தில் ஓட வேண்டாம். நமக்கு இன்னும் ஒரு விடுதலை தேவைப்படுகின்றது, நம் நாடுகளின் பதவி பித்தர்களிடமிருந்து, பேராசை பெரும்புள்ளிகளிடமிருந்து. அதற்கு நீங்கள் வேண்டும். இவ்வுலகமெங்கும் புன்செய் நிலம் நன்செய் நிலமாக மாற, வான்வெளி மாசு அகன்று இருக்க, உங்கள் உதவிகள் தேவை.
அன்று ப்ரெஞ்ச் படைகள் போர்முனைக்குத் தயாராகி நின்றன. பேரரசர் நெப்போலியன் குதிரையில் வந்து அவ்விடத்தில் இறங்கி, தளபதியிடம், நம் படை போருக்குத் தயாரா? என்றதும், ஆம் என்றார் தளபதி. இன்று எத்தனை வீரர்கள் நம் படையில் உள்ளனர்? என்று நெப்போலியன் கேட்க, நாற்பதாயிரம் வீரர்கள் என்று பதில் சொன்னார் தளபதி. மிகவும் நல்லது. என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது நம் படையில் ஒரு இலட்சம் வீரர்கள் உள்ளனர். புறப்படுங்கள் என்று படைக்குத் தலைமை தாங்கிப் போருக்குப் புறப்பட்டார் நெப்போலியன். மாணவச் செல்வங்களே, இத்தகைய தன்னம்பிக்கையுடன், மனஉறுதியுடன் கடவுள் உங்களுக்குக் கொடுத்துள்ள திறமைகளை, ஆக்கத்துக்குப் பயன்படுத்துங்கள். பெரியோர் உங்களிடம் எதிர்பாரப்பதில் இதுவும் ஒன்று என்பதை மறந்துவிடாதீர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.