2014-11-17 15:37:50

திருத்தந்தை: நம்மீது நம்பிக்கை வைத்துள்ள இறைவனை ஏமாற்றாதிருப்போம்


நவ.17, 2014. இறைவன் நமக்கு வழங்கியுள்ள திறமைகளை நாம் மேலும் வளப்படுத்துகிறோமா அல்லது அவைகளை பூட்டிவைத்து வாழுகிறோமா என்பது குறித்து சிந்திக்கவேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு திருப்பலி வாசககத்தின் தாலந்து உவமை குறித்து எடுத்துரைத்தார்.
ஒவ்வொருவரும் வீட்டிற்குச் சென்று இந்த தாலந்து உவமையை நற்செய்தியில் படித்து, நம் திறமைகள் குறித்து ஆராயுமாறுக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்மீது நம்பிக்கை வைத்து நமக்குத் திறமைகளை வழங்கியுள்ள இறைவனை நாம் ஏமாற்றக்கூடாது என அழைப்புவிடுத்தார்.
நமக்கு இறைவன் வழங்கியுள்ள அருளை நாம் மற்றவர்களின் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதையே இறைவன் விரும்புகிறார் எனவும் கூறினார் திருத்தந்தை.
நம் விசுவாசம் எத்தனை பேரைத் தொட்டுள்ளது, நம் நம்பிக்கையால் எத்தனை பேருக்கு ஊக்கமளித்துள்ளோம், நம் அன்பை எத்தனை பேருடன் பகிர்ந்துள்ளோம் என்ற கேள்விகளை நமக்குள் கேட்டு, நமக்கு வழங்கப்பட்டுள்ள அருளை எத்தகைய முறையில் பயனுள்ளதாக செலவழித்துள்ளோம் என்பது குறித்து ஆராயவேண்டும் என மேலும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.