2014-11-15 16:09:43

திருத்தந்தை இத்தாலிய மருத்துவர்களிடம் : மனித வாழ்வு எப்போதும் புனிதமானது என்பதற்குச் சாட்சியாக இருங்கள்


நவ.15,2014. கருக்கலைப்பு, கருணைக்கொலை, ஆய்வுக்குழாய் குழந்தை போன்ற செயல்பாடுகள் போலியான கருணையாகும் என்று கூறிய அதேவேளை, மனித வாழ்வைவிட மிகவும் புனிதம் மிக்கது வேறு எதுவுமில்லை என்பதை மருத்துவர்கள் தங்கள் வார்த்தையாலும் வாழ்வாலும் எப்போதும் சான்று பகருமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலிய கத்தோலிக்க மருத்துவர்கள் கழகம்(AMCI) ஆரம்பிக்கப்பட்டதன் எழுபதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, உரோமையில் இவ்வெள்ளி, சனி தினங்களில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட ஏறக்குறைய ஐந்தாயிரம் பேரை இச்சனிக்கிழமையன்று வத்திக்கான் ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனித வாழ்வின் புனிதம் பற்றிப் பேசினார்.
கருக்கலைப்பை ஊக்குவிப்பதற்கு பெண்களுக்கு உதவுகின்ற, கருணைக்கொலைச் செயலை ஒரு மாண்புச் செயலாக நோக்குகின்ற, குழந்தையை உருவாக்குவதற்கு அறிவியலைக் கையாள்கின்ற போன்ற நடவடிக்கைகள் குறித்தும் பேசினார் திருத்தந்தை.
வேறு எந்த வளங்கள், உரிமைகள், பெருமளவான சமூக-பொருளாதார வாய்ப்புகள் போன்றவற்றைவிட மனித வாழ்வு தரத்தில் மிகவும் முக்கியமானதாக இருப்பது போன்று, மனித வாழ்வைவிட மிகவும் புனிதம் மிக்கது வேறு எதுவுமில்லை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
மனித வாழ்வு எப்போதும் புனிதமானது, மதிப்புமிக்கது, அதன் உரிமைகள் மீறப்பட முடியாதது, மேலும், மனித வாழ்வு அன்புகூரப்பட்டு, பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை, மருத்துவர்கள் தங்களின் வார்த்தையாலும், எடுத்துக்காட்டாலும் சான்று பகர வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறினார் திருத்தந்தை.
பல நோயாளிச் சிறார் மற்றும் அவர்களின் குடும்பங்களுடன் இச்சந்திப்பில் கலந்து கொண்ட மருத்துவர்களிடம் இவ்வாறு உரைத்த திருத்தந்தை, நோயாளிகள், வயதானவர்கள், சிறார் போன்ற நலிந்தோர்மீது திருஅவை கொண்டுள்ள தனிப்பட்ட அன்பு பற்றி எடுத்துரைத்து, கத்தோலிக்க மருத்துவர்கள், தங்கள் தொழிலை, மனித மற்றும் ஆன்மீகப் பணியாக நோக்குமாறு கேட்டுக்கொண்டார்.
வாழ்வுக்கு எப்போதும் பணி செய்வதற்குத் தங்களை அர்ப்பணிக்கும் ஹிப்போகிராட்டிக் உறுதி மொழியை மருத்துவர்கள் எடுக்கின்றனர், ஆனால் நற்செய்தி இதைவிட இன்னும் மேலே சென்று வாழ்வை எப்போதும், வரையறையின்றி அன்பு செய்ய அழைக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.