2014-11-15 16:10:13

திருஅவை பக்த இயக்கங்களின் மூன்றாவது உலக மாநாடு


நவ.15,2014. மனித வர்த்தகத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இளையோரின் செயல்பாடுகள் பற்றி அறிவதற்கும், இவ்வர்த்தகத்தைத் தடை செய்வதற்கான சிறந்த வழிகள் பற்றி ஆராயவும் இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது.
இன்றைய உலகில் ஏறக்குறைய இரண்டு கோடியே பத்து இலட்சம் ஆண்களையும் பெண்களையும், சிறாரையும் பாதிக்கும் மனித வர்த்தகம் மற்றும் பாலியல் பயன்பாட்டிலிருந்து மீண்டவர்கள் இக்கருத்தரங்கில் பகிர்ந்து கொண்டனர்.
மேலும், “நற்செய்தியில் மகிழ்வு : ஒரு மறைபோதக மகிழ்வு” என்ற தலைப்பில் இம்மாதம் 20 முதல் 22 வரை, திருஅவை பக்த இயக்கங்கள் மற்றும் புதிய சமூகங்களின் மூன்றாவது உலக மாநாடு உரோம் Maria Mater Ecclesiae பாப்பிறைக் கல்லூரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பீட பொதுநிலையினர் அவை நடத்தும் இந்த உலக மாநாடு பற்றிப் பேசிய அவ்வவைத் தலைவர் கர்தினால் ஸ்தனிஸ்லாவ் ரில்கோ அவர்கள், திருஅவையின் மறைப்பணிக்கு இன்றைய உலகம் முன்வைக்கும் கடும் சவால்களுக்குத் தூய ஆவியிடமிருந்து காலத்துக்கேற்ற பதில் கிடைக்கும் ஒரு கொடையாக, இந்தப் பக்த இயக்கங்களின் கூறுகள் உள்ளன என்று கூறினார்.
இந்த இயக்கங்கள், திருஅவைக்கும், உலகுக்கும் நம்பிக்கையாக இருக்கின்றது என்று, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் குறிப்பிட்டதையும் நினைவுகூர்ந்தார் கர்தினால் ரில்கோ.
இந்த நவம்பர் 20 முதல் 22 வரை நடைபெறும் இந்த மூன்றாவது உலக மாநாட்டில், ஏறக்குறைய நூறு பக்த இயக்கங்களிலிருந்து முன்னூறு பொதுநிலையினர் கலந்துகொள்வார்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.