2014-11-15 16:10:21

அமெரிக்கா, சிரியா இராணுவத்தைத் தாக்கினால் சிரியா, இரண்டாவது லிபியாவாக மாறும், பேராயர் Hindo


நவ.15,2014. ஐஎஸ் இஸ்லாமிய நாட்டின் சமயத் தீவிரவாதிகளுக்கு எதிரான அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைமையிலான தலையீடு சிரியா இராணுவத்தின்மீதும் நடத்தப்பட்டால், சிரியா, இரண்டாவது லிபியாவாக மாறும் என்று எச்சரித்துள்ளார் சிரியா பேராயர் ஒருவர்.
ஐஎஸ் இஸ்லாமிய நாட்டிற்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல்கள், சிரியா இராணுவத்தின்மீதும் நடத்தப்படக்கூடும் என்ற அச்சம் நிலவுவது குறித்து பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய சிரியாவின் கத்தோலிக்கப் பேராயர் Jacques Behnan Hindo அவர்கள், சிரியாவிலுள்ள மக்களின் நிச்சயமற்ற வாழ்வு குறித்த கவலையையும் தெரிவித்தார்.
சிரியாவின் வட கிழக்கிலுள்ள ஜசீரா மாநிலத்தின் ஹசாக்கே மாவட்டத்தை 250க்கும் மேற்பட்ட ஐஎஸ் நாட்டினர் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளவேளை, அப்பகுதியில் ஒரு மாதத்துக்கு மேலாக சிரியா இராணுவம் தாக்குதல்களை நடத்தி வருகிறது என்றும் பேராயர் ஹின்டோ கூறினார்.
ஆனால் இத்தாக்குதல்கள் தொடர்ந்தால், அறுபது குர்த் இனத்தவர், 1,20,000 கிறிஸ்தவர்கள் உட்பட ஏறக்குறைய பத்து இலட்சம் மக்களின் வாழ்வு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்றும் பேராயர் ஹின்டோ கூறினார்
மேலும், ஐஎஸ் இஸ்லாமிய நாட்டின் கட்டுப்பாட்டில் வாழும் சிரியா நாட்டு அப்பாவி மக்கள், பொதுவில் தலைவெட்டப்படுதல், சுடப்படுதல், கல்லால் எரிந்து கொல்லப்படுதல் மற்றும் போராளிகளால் கைது செய்யப்படல் ஆகியவற்றை எதிர்நோக்குகின்றனர் என்று, ஐ.நா. மனித உரிமை புலன் விசாரணையாளர்கள் இவ்வெள்ளியன்று கூறினர்.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.