2014-11-14 16:32:52

மெக்சிகோவில் இடம்பெறும் வன்முறை ஒரு தேசிய நெருக்கடிநிலை, ஆயர்கள் கவலை


நவ.14,2014. மெக்சிகோவில் திட்டமிட்டக் குற்றக்கும்பலால் 43 ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் கடத்தப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்ட வன்செயலால் நாடு நெருக்கடி நிலையை சந்தித்து வருகிறது என்று கவலை தெரிவித்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
2010ம் ஆண்டு முதல் மெக்சிகோவின் நிலைமை மோசமடைந்து வருவதைத் தாங்கள் கவலையுடன் ஏற்பதாகத் தெரிவித்துள்ள ஆயர்கள், நாட்டில் இடம்பெறும் இரத்தம் சிந்தும் வன்செயல்கள் நிறுத்தப்படுமாறும், நாட்டில் அமைதி நிலவவும் உருக்கத்துடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திட்டமிட்டக் குற்றக்கும்பல்களின் அச்சுறுத்தல்களால் பலர் அச்சத்திலே வாழ்வதாகவும், சில விவகாரங்களில் அரசு அதிகாரிகளின் ஊழலும் மக்களைக் கவலைப்பட வைத்துள்ளது எனவும் ஆயர்கள் கூறியுள்ளனர்.
மெக்சிகோ நகரின் புறநகர்ப் பகுதியில் கூட்டம் நடத்திய ஆயர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ள ஆயர்கள், நாட்டில் இடம்பெற்றுள்ள வன்முறைகளும் இறப்புகளும் இனிமேலும் வேண்டாம் என்று கேட்டுள்ளனர்.
மேலும், மெக்சிகோவில் அமைதி வழியில் இடம்பெறும் போராட்டங்களுக்கு தங்கள் ஆதரவையும் கொடுத்து வருகின்றனர் ஆயர்கள்.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.