2014-11-14 16:32:20

மதத்தின் பெயரால் நடத்தப்படும் பயங்கரவாதச் செயல்களுக்கு கத்தோலிக்கரும் முஸ்லிம்களும் கண்டனம்


நவ.14,2014. பயங்கரவாதம், அடக்குமுறை, வன்முறை போன்ற நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கு மதத்தைப் பயன்படுத்துவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று, கத்தோலிக்கரும் முஸ்லிம்களும் இவ்வியாழனன்று கூறினர்.
உரோம் நகரில் மூன்று நாள்கள் நடைபெற்ற கத்தோலிக்க-முஸ்லிம் கருத்தரங்கில் கலந்துகொண்ட இவ்விரு மதங்களின் பிரதிநிதிகள், அக்கருத்தரங்கின் இறுதியில் வெளியிட்ட அறிக்கையில், பயங்கரவாதம், அடக்குமுறை, வன்முறை போன்ற நடவடிக்கைகளுக்கு எதிரான தங்களின் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளனர்.
மதத்தின் பெயரால் இடம்பெறும் வன்முறைகளுக்குக் கண்டனம், இளையோருக்குக் கல்வி, பல்சமய உரையாடலுக்கு அர்ப்பணம், சமூகங்களுக்குப் பணிசெய்வதற்கு அதிக வாய்ப்புக்களைத் தேடுதல் ஆகிய நான்கு தலைப்புக்களில் இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மதங்களுக்கிடையே உரையாடல் நடத்தும் நோக்கத்துடன் 2008ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கத்தோலிக்க-முஸ்லிம் அமைப்பு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடி, மதங்களுக்கிடையே உரையாடலை ஊக்குவித்து வருகிறது.
மூன்றாம் முறையாக உரோமையில் கூடிய இவ்வமைப்பின் பிரதிநிதிகள், கத்தோலிக்கரும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து பிறருக்குப் பணிபுரிதல் என்ற தலைப்பு குறித்து விவாதித்தனர். மேலும், இப்புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும் இப்பிரதிநிதிகள் சந்தித்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.