2014-11-14 15:02:38

புனிதரும் மனிதரே : பசிபிக் தீவுகளின் முதல் மறைசாட்சி (St. Peter Chanel)


1803ம் ஆண்டு பிரான்சின் Belley மறைமாவட்டத்தில் பிறந்த பீட்டர் ஷானல், இளம் வயதிலேயே அன்னைமரியிடம் மிகுந்த பக்திகொண்டவராக இருந்தார். தன் 16ம் வயதில் குருமடத்தில் இணைந்த இவருக்கு, குருவானவுடன் ஒரு கிராமப்புற பங்குதளமே வழங்கப்பட்டது. அந்த கிராம பங்குதளத்தில் சிறப்புப் பணியாற்றி அந்த ஊரையே பக்தியில் மிகவும் உயிர்துடிப்புடையதாக மாற்றினார். தன் பணிகளுக்கு மத்தியில் இவர் எண்ணமெல்லாம் வெளியிடங்களுக்குச் சென்று மறைப்பணியாற்றவேண்டும் என்பதாகவே இருந்தது. எனவே, அவ்வேளையில், புதிதாக துவக்கப்பட்டிருந்த மரியன்னை துறவுசபையில் 1831ம் ஆண்டு இணைந்து, வெளிநாட்டில் சென்று மறைப்பணியாற்ற ஆவல் கொண்டார். ஆனால் அத்துறவுசபையோ, இவரை பெல்லே குருமடத்தில் கல்வி கற்பிக்க அனுப்பியது. தன் சபையின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அங்கு 5 ஆண்டுகள் பணியாற்றியபின், 1836ல் பசிபிக் தீவுகளுக்கு மறைப்போதகராக ஒரு குழுவுடன் அனுப்பப்பட்டார் பீட்டர் ஷானல். பல இன்னல்கள் நிறைந்த பத்துமாத பயணத்திற்குப் பின் பசிபிக் தீவுகளை அடைந்த இக்குழுவிலிருந்து அருள்பணி பீட்டருடன் மேலும் இருபொதுநிலையினர் அடங்கிய சிறு குழு, ஃபுட்டுனா(Futuna) தீவுக்கு அனுப்பப்பட்டது. இயற்கையை வழிபட்டுவந்த மக்களிடையே அரசராகவும் தலைமைக் குருவாகவும் செயல்பட்டுவந்த நியுலிக்கி என்ற மன்னன், இவர்களை வரவேற்று உதவினான். இருப்பினும், அங்கு தட்பவெப்ப நிலையினால் மிகவும் கஷ்டப்பட்டார் பீட்டர். கடுமையான வெயிலால் சுட்டெரிக்கப்பட்டார். உணவின்றி பட்டினியால் தவித்தார். மறைபரப்புப் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது, தன் உடலில் வலுவிழந்தவராக காணப்பட்டார். இருப்பினும் தன் பணியை மகிழ்ச்சியோடு செய்தார். மக்களுக்கு போதிப்பது சிரமமாக இருந்தபோதிலும், ஒரு சிலரையேனும் மனந்திருப்பி கிறிஸ்துவின் பாதையில் சேர்த்தார். இதனால் கிறிஸ்தவ விசுவாசத்தின்மீது வெறுப்புக்கொண்ட கொலைகாரர்களால் மிகவும் மோசமாக வதைக்கப்பட்டாலும், அவர்களின் மேல் சிறுதுளிகூட வெறுப்பு காட்டாமல் அவர்களையும் அன்பு செய்தார் பீட்டர் ஷானல். இதனை அறிந்து, இவரின் பாசத்தை சுவைத்த ஃபுட்டுனா தீவினர், இவரை "உயர்ந்த உள்ளம் கொண்ட பீட்டர்" என்றே அழைத்தனர். இவர் மறையுரை ஆற்றும்போது "விதைப்பவன் ஒருவன், அறுப்பவன் ஒருவன்" என்பதை அடிக்கடி கூறுவார். மரியன்னை பக்தியில் சிறந்து விளங்கிய இவர், மரியன்னையின் முன் பல மணிநேரம் மண்டியிட்டு செபிப்பார்.
அருள்பணி பீட்டரும் அவரின் உடனுழைப்பாளர்களும் அத்தீவின் மொழியை விரைவாக கற்றதுடன், மக்களின் நம்பிக்கையையும் பெற்றதால், தன் மக்கள் மீதுள்ள அதிகாரம் கைவிட்டுப்போய்விடுமோ என அஞ்சிய அரசர், பீட்டரை வெறுக்கத் தொடங்கினார்.
இதற்கிடையே, மன்னரின் மகன், மறைபோதகர்களின் பணியால் கவரப்பட்டு கிறிஸ்தவத்தைத் தழுவ முயன்றபோது, மன்னரின் கோபம் எல்லை மீறியது. தன் படையின் ஒரு பிரிவை அனுப்பி, அருள்பணி பீட்டரையும் அவர் உதவியாளர்களையும் கொல்லும்படிக் கட்டளையிட்டார். மறைப்பணித் தளத்திற்குள் புகுந்த படைவீரர்கள் அருள்பணி பீட்டரையும் அவரின் உதவியாளர்களையும் 1841ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி தடியால் அடித்துக் கொன்றனர். இவரோடு சேர்ந்து ஃபுட்டுனா தீவில் கிறிஸ்தவம் அழிந்துவிடும் என்று அரசர் கருதினார்.
அத்தீவில் அருள்பணி பீட்டர் ஆற்றிய மறைப்பணி வீண்போகவில்லை. கிறிஸ்தவத்தை விரட்ட எண்ணினார் மன்னர். ஆனால் அருள்பணி பீட்டர் இறந்த 5 மாதங்களிலேயே அத்தீவு முழுவதும் கிறிஸ்தவ மறையைத் தழுவியது.ஒசியானியாத் தீவுகள் முழுவதும் இன்றுவரை கிறித்தவ மறை செழித்து வளர்ந்து வருகிறது. இப்புனிதரை இப்பகுதியில் வாழ்பவர்கள் தங்களின் முதல் மறைசாட்சி என்று கூறி வாழ்த்தி மகிழ்கின்றனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.