2014-11-14 16:31:00

திருத்தந்தை பிரான்சிஸ், பெரு குடியரசுத் தலைவர் சந்திப்பு


நவ.14,2014. பெரு நாட்டு அரசுத்தலைவர் Ollanta Moises Humala Tasso அவர்களை, இவ்வெள்ளி காலை திருப்பீடத்தில் தனியே சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பெரு நாட்டுக்கும், வத்திக்கானுக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள் குறித்தும், குறிப்பாக, பெரு நாட்டின் தனித்துவத்தை உருவாக்கியதில் கிறிஸ்தவத்தின் சிறப்பான பங்கு குறித்தும், அந்நாட்டு மக்களின் மனித, சமூக மற்றும் கலாச்சார முன்னேற்றத்துக்கு ஆதரவாக கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிய மற்றும் தொடர்ந்து ஆற்றும் பணிகள் குறித்தும் இச்சந்திப்பின்போது கருத்துப்பரிமாற்றம் இடம்பெற்றது என்று திருப்பீட செய்தித் தொடர்பகம் கூறியது.
அப்பகுதியின் அரசியல் மற்றும் சமூகச் சூழல் குறித்தும், இன்னும், அப்பகுதியின் முழு வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் பற்றியும் இச்சந்திப்பில் மிகுந்த அக்கறையுடன் பேசப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தையைச் சந்தித்த பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், நாடுகளுடன் உறவுகள் கொள்ளும் திருப்பீடத் துறையின் தலைவர், பேராயர் தோமினிக் மம்பெர்த்தி அவர்களையும், பெரு நாட்டு அரசுத்தலைவரும், அவருடன் வந்திருந்தோரும் சந்தித்துப் பேசினர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.