2014-11-14 16:30:49

திருத்தந்தை : பொருளாதாரத்தின் மையத்தில் பணம் அல்ல, மனிதரே வைக்கப்பட வேண்டும்


நவ.14,2014. இன்றைய உலகின் தாராளமயமாக்கலுக்குப் பதிலளிக்கும் வகையில் எல்லாவற்றுக்கும் மேலாக பணத்தை முதலிடத்தில் வைக்கும் போக்கு உள்ளது, ஆனால் அதற்கு மாறாக, பொருளாதாரத்திலும்கூட மனித மாண்பு எப்பொழுதும் மையத்தில் வைக்கப்பட வேண்டுமென்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம் நகரில் நடைபெறும் அனைத்துலக பொருளாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் ஏறக்குறைய ஏழாயிரம் பேரை இவ்வெள்ளியன்று திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்த திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
மனிதரை மையப்படுத்துவது, பொருளாதார மற்றும் பொருளியக் கூறுகளுக்கான பதிலாக மட்டுமல்லாமல், பொருளாதாரத்திலும் நிதியிலும் தொழிலிலும் நன்னெறிகளை ஊக்குவித்து வளர்ப்பதற்கும் உதவியாக உள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை
இன்று உலகில் பலரின் வேலைவாய்ப்புகள் உறுதியற்ற நிலையில் உள்ள சூழலில், உலகத் தாராளமயமாக்கலில் தொழிலாளர்களுக்குத் தோழமையுணர்வு காட்டப்படுமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்று உலகில் பலர் வேலைகளை இழந்துள்ளனர், இதனால் ஏற்படும் விளைவுகளை பல குடும்பங்கள் அனுபவித்து வருகின்றன, பல இளையோர் முதலில் வேலையையும் மாண்புடன்கூடிய வேலையையும் எதிர்பார்க்கின்றனர், இந்த நிலையை அறிந்துள்ள கணக்கர்கள் தங்களின் பணிகளில் மனித மாண்பை எப்போதும் முதலிடத்தில் வைக்குமாறு வலியுறுத்தினார் திருத்தந்தை.
பொதுநலனுக்கான பணியில் சொந்த ஆதாயத்தை முன்வைக்கும் சோதனைகள் எல்லாருக்கும், குறிப்பாக, பொருளாதார மற்றும் நிதித் துறைகளில் பணிசெய்வோருக்கு ஏற்படலாம், ஆனால் ஒவ்வொருவரும் செபம் மற்றும் இறைவார்த்தையிலிருந்து ஊட்டம்பெற்று சரியான பாதையில் செல்லுமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.