2014-11-13 14:39:26

புனிதரும் மனிதரே : தந்தையால் பலிகடா ஆக்கப்பட்டவர் (St. Lawrence O'Toole)


Lawrence O'Toole அவர்கள், அயர்லாந்தில் Hy Murray இனத் தலைவர் Muirchertach Ua Tuathail என்பவரின் மகன். Leinster அரசர் Dermot McMurrogh என்பவருக்குக்கீழ் பணிபுரிந்துவந்த இலாரன்சின் தந்தை Muirchertach மீது அரசர் குற்றம் சுமத்தி அவரைக் கைது செய்யத் திட்டமிட்டார். அப்போது Muirchertach அரசரிடம், தனக்குப் பதிலாக தனது கடைசி மகன் இலாரன்சைக் கொண்டுசெல்லுமாறு கூறினார். அப்போது இலாரன்சுக்கு வயது பத்து. எனவே இலாரன்ஸ் தனது பத்தாவது வயதில், 1138ம் ஆண்டில் Leinster அரசரால் அடிமையாக எடுத்துச் செல்லப்பட்டார். சிறுவனாக இருந்தாலும் போதிய உணவின்றி, பசி பட்டினியாய், மிகக் கொடுமையாக நடத்தப்பட்டார். இரண்டு ஆண்டுகள் கழித்து இலாரன்ஸ் தனது 12வது வயதில் Glendalough நகர் ஆயரால் விடுதலை செய்யப்பட்டார். Glendalough துறவு இல்லத்தில் கல்வியிலும் அருள்நெறி வாழ்விலும் வளர்ந்தார். 1161ம் ஆண்டில் டப்ளின் பேராயராக இலாரன்ஸ் திருப்பொழிவு செய்யப்பட்டார். அப்போது இவருக்கு வயது 32. தனது உயர்மறைமாவட்ட நிர்வாகத்தையும் குருக்களின் வாழ்வையும் சீர்படுத்தினார். மயிராடை அணிந்து கடும் தபசியாக வாழ்ந்தார். 1170ம் ஆண்டில் டப்ளின் நகர் இரண்டாவது தடவையாக முற்றுகையிடப்பட்டபோது இருதரப்புக்குமிடையே இடைநிலையாளராகச் செயல்பட்டு அமைதியை நிலைநாட்டினார். 1171ம் ஆண்டில் ஒரு வேலையாக, இங்கிலாந்தின் கான்டர்பரி சென்றபோது அங்கு அவர் திருப்பலி நிறைவேற்ற தயார் செய்துகொண்டிருந்தார். அப்போது மனநோயாளி ஒருவர், பேராயர் இலாரன்ஸ் அவர்கள், புனித தாமஸ் பெக்கெட் போல மறைசாட்சியாக வேண்டுமென்று விரும்பி அவரைக் கத்தியால் தலையில் தாக்கினார். இலாரன்ஸ் இறந்துவிட்டார் என்றே எல்லாரும் நினைத்தனர். ஆனால் அவரோ ஒரு டம்ளரில் தண்ணீர் கேட்டு அதை ஆசீர்வதித்து தனது தலையில் ஊற்றினார். உடனே காயம் குணமானது. பின்னர் திருப்பலி நிறைவேற்றினார். 1175ம் ஆண்டில் அயர்லாந்து அரசர் Rory O’Connorக்கும், இங்கிலாந்து அரசர் 2ம் ஹென்ரிக்குமிடையே Windsor ஒப்பந்தம் ஏற்படவும், போர் முடியவும் காரணமானார். புனித ஆயர் இலாரன்ஸ் ஓடூலே, 1180ம் ஆண்டு நவம்பர் 14ம் நாள் இறந்தார். அதற்கு 45 ஆண்டுகள் கழித்து இவர் புனிதராக அறிவிக்கப்பட்டார். "அறியாமையில் உள்ள ஏழைகளே, இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்? உங்களின் துன்பங்களில் உங்களை யார் கவனிப்பார்கள்? யார் உங்களுக்கு உதவுவார்கள்?" என்று டப்ளின் மக்களிடம் இவர் கூறியுள்ளார். பேராயர் இலாரன்ஸ் அவர்களை உயில் எழுதச் சொன்னபோது, “உலகில் விட்டுச்செல்ல என்னிடம் ஒரு பைசாகூட இல்லையென்பது இறைவனுக்குத் தெரியும்” என எழுதினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.