2014-11-13 16:16:46

இயற்கை முறை வேளாண்மையை மட்டும் பயன்படுத்தும் தமிழ்நாட்டு கிராமம்


நவ.13,2014. தமிழ்நாட்டின் தருமபுரி நகருக்கருகே 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வத்தல்மலை என்ற மலைப்பகுதியில், இன்றளவும் வேளாண்மை, இயற்கை முறையிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சாலையே இல்லாத இந்த மலையில் ஓராண்டுக்கு முன்புதான் மலை மீது செல்லும் வகையில் சாலை அமைத்துத் தரப்பட்டது என்ற நிலையில், மற்ற பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணப்பயிர் வேளாண்மையும் இங்குள்ள விவசாயிகளை இன்னும் ஆட்கொள்ளவில்லை.
80 விழுக்காடு வரை வானம் பார்த்த பூமிகளான இங்குள்ள விளைநிலங்களில் திணை, ராகி, நெல் ஆகிய உணவு தானியங்கள் மட்டுமே பெருமளவு பயிரிடப்படுகின்றன. ராகி வயல்களில் ஊடுபயிராக கடுகு விதைப்பது இங்கு நீண்ட காலமாக வழக்கத்தில் உள்ளது. இதுதவிர ஆங்காங்கே மரப்பயிர்கள், காபி, மிளகு, பலா, சில காய்கறிகள் ஆகியவையும் கூட விளைவிக்கப்படுகின்றன.
கால்நடை கழிவுகளை எருவாகக் கொடுத்து, ஏரால் உழுது, கைகளால் கதிர் அறுத்து, எருதுகளால் தாம்பு ஓட்டி, முறத்தால் தூற்றும் பாரம்பரிய விவசாய முறை இன்னும் வத்தல் மலையில் உயிர்ப்போடு இருக்கிறது.
ரசாயன உரங்களும், பூச்சி மருந்தும் மண்ணின் உயிர்த் தன்மையை அடியோடு அழித்து விடும் என்ற அச்ச உணர்வு, இம்மலைப்பகுதி மக்களை இயற்கை விவசாயத்தின் பக்கம் தக்க வைத்துள்ளது.
விளைவதில், உணவுத் தேவைக்கு வைத்துக்கொண்டது போக மீதமுள்ள தானியங்களை நல்லம்பள்ளி பகுதியில் உள்ள தானிய மண்டிகளில் இம்மக்கள் விற்று விடுகின்றனர். இயற்கை முறையில் விளைந்த தானியங்களை விரும்பும் சிலர் நேரடியாக வந்தும் வாங்கிச் செல்கின்றனர்.

ஆதாரம் : தி இந்து








All the contents on this site are copyrighted ©.