2014-11-13 16:10:52

இந்திய நாளிதழில் இயேசுவைக் குறித்து வெளியான கட்டுரைக்கு, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் வன்மையானக் கண்டனம்


நவ.13,2014. நவம்பர் 11, இச்செவ்வாயன்று இந்தியாவின் நாளிதழ் ஒன்று இயேசுவைக் குறித்து வெளியிட்டிருந்த ஒரு கட்டுரையை, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை வன்மையாகக் கண்டனம் செய்துள்ளது.
இறைவனுக்கு எதிராக வெளியிடப்பட்டுள்ள அவதூறை வன்மையாகக் கண்டிக்கும் அதே வேளையில், உண்மையைத் திரித்துக் கூற முயற்சிகள் செய்யும் இத்தகைய மனிதர், நல்லறிவை பெறுவதற்கு செபிக்கவேண்டும் என்று ஆயர் பேரவையின் அறிக்கை கூறுகிறது.
1500 ஆண்டுகளுக்கு முன்னதாக எழுதப்பட்ட ஒரு கையெழுத்துச் சுவடியை அடிப்படையாகக் கொண்டு இலண்டன் மாநகரில் வெளியான ஒரு கட்டுரை, இயேசுவின் வாழ்க்கையை வேறுபட்ட வகையில் புரட்டி எழுதியுள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பு குறித்து இந்திய நாளிதழில் வெளியான கட்டுரையைக் குறித்து, கிறிஸ்தவர்கள் வீணான முறைகளில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவேண்டாம் என்றும் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் அறிக்கை விண்ணப்பித்துள்ளது.
உண்மையைத் திரித்துக் கூறுவதால், மனித சமுதாயத்திற்கு விளைவிக்கும் தீமைகளை இத்தகையோர் உணரவேண்டும் என்று, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ள அருள்பணி ஜோசப் சின்னய்யன் அவர்கள் கூறியுள்ளார்.

ஆதாரம் : CBCI








All the contents on this site are copyrighted ©.