2014-11-12 15:37:51

வறியோரின் உயிர்கள் மீது இந்திய அரசு கொண்டிருக்கும் அக்கறையின்மை - மும்பை துணை ஆயர் பெர்னான்டெஸ்


நவ.12,2014. இந்தியாவில் கருத்தடை அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட பெண்கள் இறந்தது, வறியோரின் உயிர்கள் மீது இந்திய அரசு கொண்டிருக்கும் அக்கறையின்மையைக் காட்டுகிறது என்று இந்திய ஆயர் ஒருவர் கூறினார்.
இந்த உயிர்பலி குறித்து ஆசிய செய்திக்குப் பேட்டியளித்த மும்பை துணை ஆயர், டோமினிக் சாவியோ பெர்னான்டெஸ் அவர்கள், குடும்பக் கட்டுப்பாடு என்ற பெயரில் அறுவைச் சிகிச்சை எண்ணிக்கையைக் கூட்டுவதற்காக அவசரமாக நடத்தப்படும் இலவச முகாம்கள் குறித்து தன் வருத்தத்தை வெளியிட்டார்.
குடும்பக் கட்டுப்பாடு என்ற பெயரில் இந்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள், கத்தோலிக்கத் திருஅவையின் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானவை என்றும் ஆயர் பெர்னான்டெஸ் அவர்கள் எடுத்தரைத்தார்.
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் Pendari என்ற கிராமத்தில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற கருத்தடை இலவச முகாமில் கலந்துகொண்ட 83 பெண்களுக்கு, சுத்தமற்ற முறையில், கவனமின்றி செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சையால், இதுவரை 13 பெண்கள் உயிரிழந்துள்ளனர், மேலும் 30க்கும் அதிகமானோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
நடைபெற்ற இந்தத் தவறை அடுத்து, மூன்று மருத்துவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும், இந்த இலவச முகாம் குறித்து ஆய்வு செய்ய விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது என்றும் சத்தீஸ்கர் அரசு கூறியுள்ளது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.