2014-11-12 15:36:44

முதல் உலகப் போர் நிறுத்தத்தின் நினைவைக் கடைபிடித்த ஐரோப்பிய ஆயர்கள்


நவ.12,2014. கடந்த நூறாண்டுகளைத் திருப்பிப் பார்க்கும்போது, ஐரோப்பிய வரலாற்றில் நாம் கடந்துவந்த இந்த நூறு ஆண்டுகளில் சந்தித்த இருளை இதுவரைச் சந்திக்கவில்லை என்பதை உணர்கிறோம் என்று ஐரோப்பிய ஆயர்கள் கூறியுள்ளனர்.
1918ம் ஆண்டு, நவம்பர் 11ம் தேதி முடிவுக்கு வந்த முதல் உலகப் போரின் நினைவைக் கடைபிடிக்க, ஐரோப்பிய ஆயர்கள் அவையின் பிரதிநிதிகள் Verdun எனுமிடத்தில் அஞ்சலி செலுத்தியபின், ஆயர்கள் விடுத்த ஓர் அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளனர்.
ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயர்களாகிய நாங்கள், இன்றளவும் ஐரோப்பாவில் நிலையான அமைதி இல்லாமல் வாழும் சமுதாயத்தை எண்ணிப் பார்க்கிறோம் என்றும், ஐரோப்பாவின் ஒற்றுமையற்ற நிலைக்கு திருஅவையைச் சேர்ந்த ஊழியர்களும் காரணமாக இருந்துள்ளனர் என்பதை துயரத்துடன் நினைவில் கொள்கிறோம் என்றும் கூறினர்.
1914ம் ஆண்டு துவங்கப்பட்ட முதல் உலகப் போர், நான்கு ஆண்டுகள் நான்கு மாதங்கள் நீடித்தபின், 1918ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி முற்பகல் 11 மணிக்கு முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.
பெரிய போர் என்றும் அழைக்கப்படும் இப்போரில், 90 இலட்சம் படை வீரர்களும், ஒரு கோடிக்கும் மேற்பட்ட பொதுமக்களும் உயிரிழந்தனர். Verdun என்ற இடத்தில் நடைபெற்ற போரில் மட்டும், 10 இலட்சம் வீரர்கள் இறந்தனர்.
இவர்களில், அடையாளம் தெரியாத 1,30,000 வீர்களின் எலும்புகள் புதைக்கப்பட்டுள்ள Ossuaire de Douaumont என்ற இடத்தில் அஞ்சலி செலுத்திய ஐரோப்பிய ஆயர்கள் ஒவ்வொருவரும், இறந்தோரின் நினைவாக ஒரு விளக்கை ஏற்றி வைத்தனர்.

ஆதாரம் : ICN








All the contents on this site are copyrighted ©.