2014-11-12 15:37:18

போரினால் முற்றிலும் சோர்ந்து போயிருக்கும் சிரியா மக்களை எண்ணி, வேதனை எழுகிறது - பேராயர் Zenari


நவ.12,2014. சிரியா நாட்டின் போரை நிறுத்துவதற்கு ஐ.நா. அவையின் சிறப்புத் தூதர், Staffan de Mistura அவர்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் உற்சாகம் தந்தாலும், போரினால் முற்றிலும் சோர்ந்து போயிருக்கும் மக்களை எண்ணி, வேதனையும் எழுகிறது என்று தமஸ்குவின் திருப்பீடத் தூதர், பேராயர் Mario Zenari அவர்கள் கூறினார்.
போர் நிறுத்தம் குறித்து சிரியாவின் அரசுத் தலைவர் Bashar al-Assad அவர்கள் விருப்பம் தெரிவித்திருக்கும் நல்ல செய்தியை ஐ.நா. தூதர் Mistura அவர்கள் தன்னுடன் பகிர்ந்துகொண்டதை ஆசியச் செய்தியிடம் எடுத்துரைத்த பேராயர் Zenari அவர்கள், நாட்டின் ஒரு சில நகரங்களில் மோதல்கள் உடனடியாக முடிவுக்கு வருவது மிகவும் அவசியம் என்று கூறினார்.
Aleppo போன்ற நகரங்களில் போரின் அழிவுகள் மிக அதிகம் என்றும், இறந்துள்ள மக்களின் எண்ணிக்கை பல ஆயிரம் என்றும் சுட்டிக்காட்டிய பேராயர் Zenari அவர்கள், சிரியாவின் ஒரு சில பகுதிகளில் வாழ்வோர் அனைத்து நம்பிக்கையையும் இழந்துள்ளனர் என்று கூறினார்.
மூன்றரை ஆண்டுகளாக நீடிக்கும் இந்த உள்நாட்டுப் போரினால் அனைத்துத் தரப்பினரும் மனமிழந்து வாழ்வது நாட்டின் எதிர்காலத்தை பெரிதும் பாதிக்கும் என்று பேராயர் Zenari அவர்கள் தன் கவலையை வெளியிட்டார்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.