2014-11-12 15:34:13

திருத்தந்தை பிரான்சிஸ் - வறுமை மற்றும் சமுதாயத்தின் விளிம்புகளுக்குத் தள்ளப்படுதல் ஆகியத் தீமைகளே, தீவிரவாதம் என்ற வடிவில் வெளியாகிறது


நவ.12,2014. எந்த ஒரு அரசியல் முடிவிலும், வறியோர் மற்றும் சமுதாயத்தின் விளிம்புகளுக்குத் தள்ளப்பட்டுள்ளோர் முக்கிய இடம் பெறவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உலகத் தலைவர்களிடம் கூறியுள்ளார்.
நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ஆஸ்திரேலியாவின் Brisbane நகரில் நடைபெறவிருக்கும் G 20 நாடுகளின் தலைவர்கள் கூட்டத்திற்கு திருத்தந்தை அனுப்பியுள்ள இச்செய்தியில், வலிமை வாய்ந்த அரசுகள் எடுக்கும் முடிவுகள், வெறும் வார்த்தைகளாக ஒலிக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.
G 20 உச்சிமாநாட்டை தலைமை தாங்கி நடத்தவிருக்கும் ஆஸ்திரேலியப் பிரதமர், Tony Abbott அவர்களுக்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள இச்செய்தியில், உலகச் செல்வங்களை அறிவார்ந்த வகையில் பயன்படுத்தும் உலகப் பொருளாதாரம் குறித்து இந்த உச்சி மாநாட்டில் பேசவிருப்பது இன்றைய உலகின் தேவை என்று கூறியுள்ளார்.
பொருளாதாரத்தில் வளர்ந்துள்ள G 20 நாடுகளையும் சேர்த்து, உலகின் பல பகுதிகளில் உணவு பற்றாக்குறை, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய துயரங்கள் பரவலாகக் காணப்படுகின்றன என்றும், இத்துயரங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இளையோரும், குழந்தைகளுமே என்றும் திருத்தந்தையின் செய்தி வலியுறுத்துகிறது.
சரிந்துவரும் பொருளாதாரத்தை மீண்டும் நிலை நிறுத்துவதற்குத் தேவையான நிதிச் சேமிப்பு, நாடுகளிடையே நிகழும் தேவையற்ற போர்களில் வீணாக்கப்படுவதை வலிமை வாய்ந்த அரசுகள் உணரவேண்டும் என்றும் திருத்தந்தை தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
வறுமை மற்றும் சமுதாயத்தின் விளிம்புகளுக்குத் தள்ளப்படுதல் ஆகியத் தீமைகளே தீவிரவாதம் என்ற வடிவில் வெளியாகிறது என்றும், எனவே, இத்தீமைகளை ஒழிப்பது அரசுகளின் முதன்மையானப் பணி என்றும் திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா, ஆர்ஜென்டீனா, பிரேசில், சீனா, இந்தியா, ஜெர்மனி, பிரான்ஸ், ஆகிய நாடுகள் உட்பட, G 20 நாடுகள் கூட்டமைப்பில் உள்ள 20 நாடுகளில், உலக மக்கள் தொகையின் 66 விழுக்காட்டினர் வாழ்கின்றனர். இந்நாடுகளின் உற்பத்தித் திறன், உலக உற்பத்தித் திறனில் 85 விழுக்காடாகவும், உலக வர்த்தகத்தின் 75 விழுக்காடாகவும் உள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி / VIS








All the contents on this site are copyrighted ©.