2014-11-12 15:38:26

தலத்திருஅவையிடமிருந்து பாகிஸ்தான் அரசு எடுத்துக்கொண்ட ஒரு கத்தோலிக்கப் பள்ளி, மீண்டும் ஒப்படைப்பு


நவ.12,2014. பாகிஸ்தானில் கத்தோலிக்கத் திருஅவையிடமிருந்து அரசு எடுத்துக்கொண்ட ஒரு கத்தோலிக்கப் பள்ளியை, மீண்டும் அரசு, தலத்திருஅவையிடம் ஒப்படைத்திருப்பது குறித்து கத்தோலிக்கர்கள் தங்கள் மகிழ்வை வெளிப்படுத்தியுள்ளனர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தான் அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த புனித பிரான்சிஸ் சேவியர் உயர் நிலைப் பள்ளியை, அரசு மீண்டும் லாகூர் உயர் மறைமாவட்டத்திடம் ஒப்படைத்திருப்பதற்கு இறைவனுக்கு நன்றி சொல்கிறோம் என்று அப்பகுதியின் பங்குத் தந்தை, அருள்பணி ஆண்ட்ரு நிசாரி அவர்கள் CNA கத்தோலிக்கச் செய்தியிடம் கூறினார்.
1842ம் ஆண்டு நிறுவப்பட்ட புனித பிரான்சிஸ் சேவியர் உயர் நிலைப் பள்ளியை, 1972ம் ஆண்டு பாகிஸ்தான் அரசு கைப்பற்றியது. 2004ம் ஆண்டு முதல் லாகூர் உயர்மறைமாவட்டம் மேற்கொண்ட ஒரு முயற்சியின் எதிரொலியாக, இப்பள்ளி தற்போது உயர் மறை மாவட்டத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
30 ஆண்டுகளாக சரியான பராமரிப்பு இன்றி, ஆபத்தான நிலையில் உள்ள பள்ளியை முற்றிலும் இடித்துவிட்டு, புதிதாக ஒரு பள்ளியை உருவாக்கும் திட்டத்தில் உயர் மறைமாவட்டம் ஈடுபட்டுள்ளது என்று அருள்பணி நிசாரி அவர்கள் கூறினார்.

ஆதாரம் : CNA/EWTN








All the contents on this site are copyrighted ©.