2014-11-12 16:21:46

அமைதி ஆர்வலர்கள் : 1961ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது (Dag Hammarskjöld)


நவ.12,2014. பல்வேறு துறைகளில் நொபெல் விருதுகள் வழங்கப்பட ஆரம்பித்த 1901ம் ஆண்டிலிருந்து 2014ம் ஆண்டுவரை 864 ஆர்வலர்களுக்கும், 25 நிறுவனங்களுக்கும் என 889 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களில் மூன்று பேருக்கு அவர்கள் இறந்த பின்னர் இவ்விருதுகள் வழங்கப்பட்டன. அவர்களில் ஒருவர் 1931ம் ஆண்டில், நொபெல் இலக்கிய விருது பெற்ற Erik Axel Karlfeldt. மற்றொருவர் 1961ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது பெற்ற Dag Hammarskjöld. ஆயினும், இவ்விருதுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் இறப்புகள் இடம்பெற்றால் மட்டுமே நொபெல் விருதுகள் வழங்கப்படலாம் என, 1974ம் ஆண்டில் நொபெல் நிறுவனம் தீர்மானித்தது. இருந்தபோதிலும், 2011ம் ஆண்டில் நொபெல் மருத்துவ விருது Ralph Steinman என்பவருக்கு வழங்கப்பட்டது. இவ்விருது அறிவிக்கப்படுவதற்கு மூன்று நாள்களுக்கு முன்னர் அவர் இறந்துவிட்டார். இவ்விருதை அறிவித்த நொபெல் நிறுவனம், இவரின் இறப்பு குறித்து அறியாமலே அறிவித்துவிட்டதாகச் சொல்லி அவருக்கு அவ்விருதை வழங்கியது. 1961ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது பெற்ற Dag Hammarskjöld அவர்கள், 1961ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி அமைதிப் பேச்சுவார்த்தைக்காக மேற்கொண்ட விமானப் பயண விபத்தில் உயிரிழந்தார். இவரது இறப்பையொட்டி செய்தி வெளியிட்ட அமெரிக்க அரசுத்தலைவர் ஜான் எப் கென்னடி அவர்கள், Hammarskjöld நம் நூற்றாண்டின் மிகப்பெரிய அரசியல் நிபுணர் என்று பாராட்டினார்.
1905ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி பிறந்த ஸ்வீடன் நாட்டு Dag Hjalmar Agne Carl Hammarskjöld அவர்கள், அரசியல் தூதர், பொருளாதார நிபுணர் மற்றும் எழுத்தாளர். 1953ம் ஆண்டு ஏப்ரலில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் இரண்டாவது பொதுச்செயலராகப் பொறுப்பேற்று, இறப்புவரை அப்பணியில் இருந்தார். அப்போது அவருக்கு வயது 47. இப்பணியில் அமர்ந்தவர்களில் மிக இளம் வயதினராக இவர் நோக்கப்படுகிறார். இவரது தந்தை Hjalmar Hammarskjöld, 1914ம் ஆண்டு முதல் 1917ம் ஆண்டுவரை ஸ்வீடன் நாட்டுப் பிரதமராகப் பணியாற்றியவர். நான்கு பிள்ளைகளில் கடைசிப் பிள்ளையான Dag Hammarskjöld அவர்கள் 1953ம் ஆண்டில் ஒரு வானொலி நிகழ்ச்சியில் தனது பெற்றோர் பற்றிப் பகிர்ந்துகொண்டார். எனது தந்தையின் வாழ்வில் நான் சந்தித்த படைவீரர்கள், அரசு அதிகாரிகளிடமிருந்து நான் கற்றுக்கொண்டது என்னவெனில், ஒருவர் தனது நாட்டுக்காக அல்லது மனித சமுதாயத்துக்காக, தன்னலமற்றுப் பணியாற்றுவதைவிட திருப்திதரக்கூடியது வேறு எதுவுமில்லை. இதற்கு ஒருவர் தனது அனைத்து சொந்த நலன்களையும் தியாகம் செய்ய வேண்டும். அதேநேரம் தனது கொள்கைகளில் உறுதியாக நிற்க வேண்டும். அடுத்து எனது தாய் Agnes Hammarskjöld அவர்களின் வாழ்வில் நிபுணர்களையும், மறைபோதகர்களையும் சந்தித்தேன். அனைத்து மனிதரும் இறைவனின் குழந்தைகள், அனைவரும் சமம், அனைவரையும் இறைவனில் நம் தலைவர்களாக நடத்த வேண்டும் என்பதை உணர்ந்தேன் என்று பகிர்ந்துகொண்டார்.
Dag Hammarskjöld அவர்கள் அரசியல் மற்றும் பொருளாதார வாழ்வில் எத்துணை ஈடுபாடு காட்டினாரோ அதேஅளவு ஈடுபாடு அவரது அருள்நெறி வாழ்விலும் இருந்தது என்பதை இறப்புக்குப்பின் அவரது இளவயது குறிப்புக்களிலிருந்து அறிகிறோம். நாளை நானும் மரணமும் சந்திப்போம். மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கும் ஒருவர்மீது மரணம் தனது கத்தியை வைத்து தாக்கும் என்ற அவரின் குறிப்புகள் இவரின் உள்ளார்ந்த வாழ்வை வெளிப்படுத்துகின்றன. ஸ்வீடன் நாட்டின் உப்சாலா பல்கலைக்கழகத்தில் மிகச் சிறந்த மாணவராகத் திகழ்ந்த Dag Hammarskjöld, தனது தாய்மொழியோடு ஆங்கிலம், ப்ரெஞ்ச், ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் தேர்ச்சிபெற்றார். பொருளாதாரத்திலும் சட்டக்கல்வியிலும் பட்டயங்கள் பெற்றார். 1946ல் ஸ்வீடன் வெளியுறவு விவகாரத் துறையில் பணியைத் தொடங்கினார். பின்னர் அதன் நிதி ஆலோசகரானார். 1953ம் ஆண்டு ஏப்ரலில், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் அறுபது வாக்குகளுள் 57 வாக்குகள் பெற்று, இரண்டாவது பொதுச்செயலராகப் பணியைத் தொடங்கினார். இப்பதவியில் இரண்டு தடவைகள் இருந்தார். தனது ஐ.நா. செயலகத்தில் பணிபுரிந்த நான்காயிரம் அலுவலகர்களின் பணிகளை நெறிப்படுத்தினார். கொரியச் சண்டையில் சீனர்கள் கைதுசெய்திருந்த அமெரிக்கப் படைவீரர்கள் விடுதலை செய்யப்படுவதற்கு 1954,55ம் ஆண்டுகளில் கடுமையாக உழைத்து அதில் வெற்றி கண்டார் Dag Hammarskjöld.
ஐ.நா. பொதுச் செயலர் பணியின்போது, மத்திய கிழக்குப் பகுதியில், பாலஸ்தீனாவில் நிலைமையைச் சரிசெய்வதற்கு அதிகமாக முயற்சிகளை எடுத்தார் Dag Hammarskjöld. 1956ம் ஆண்டின் சூயஸ் கால்வாய்ப் பிரச்சனையில் அதில் ஈடுபட்டுள்ள நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு முழுமூச்சுடன் ஈடுபட்டார். UNEF என்ற ஐ.நா. அவசரகாலப் படைப்பிரிவை அமைப்பதற்கு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தினார். ஒரு பன்னாட்டு நிறுவனம் இப்படி செயல்பட்டது இதுவே முதன்முறையாகும். 1958ம் ஆண்டில் லெபனோனிலும் ஜோர்டனிலும் எழுந்த பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு லெபனோனில் ஐ.நா. கண்காணிப்புக் குழுவையும், ஜோர்டனில் ஐ.நா. அலுவலகத்தையும் நிறுவினார். இதனால் அமெரிக்க, பிரித்தானியப் படைகள் அங்கிருந்து அகற்றப்பட்டன. கம்போடியாவும் தாய்லாந்தும் அரசியல் உறவுகளை முறித்துக்கொண்டபோது 1959ம் ஆண்டில் தென்கிழக்கு ஆசியாவுக்குத் தனது பிரதிநிதியை அனுப்பினார் இவர். 1960ம் ஆண்டு ஜூலையில் புதிதாக விடுதலையடைந்த ஆப்ரிக்க நாடாகிய காங்கோவின் புதிய அரசு, தனது இராணுவத்தில் கலகம், பெல்ஜியப் படைகளின் தலையீடு, Katanga மாநிலப் பிரிவினை போன்ற நெருக்கடிகளை எதிர்நோக்கியது. அதனால் ஐ.நா.வின் உதவியை நாடியது. ஐ.நா.வும் தனது அமைதிப்படையை அனுப்பி உதவியது.
காங்கோவில் நிலைமை மேலும் மோசமடைந்தது. 1961ம் ஆண்டு செப்டம்பரில் Katanga படைகளுக்கும், ஐ.நா. படைகளுக்கும் இடையே போர் மூண்டது. எனவே போர் நிறுத்தத்தைக் கொண்டுவரும் நோக்கத்தில் Katanga தலைவர் Tshombeவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு விமானப் பயணம் மேற்கொண்டார். அச்சமயம் Katangaவுக்கும், வட Rhodesiaவுக்கும் இடையேயான எல்லைப்புறத்தில், செப்டம்பர் 17 மற்றும் 18ம் தேதிக்கு இடைப்பட்ட இரவில், இவர் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளாகியது. Dag Hammarskjöld அவர்களும் அவரோடு பயணம் செய்த 15 பேரும் இறந்தனர். அமைதிக்கான பணியின்போது உயிரிழந்த Dag Hammarskjöld அவர்களுக்கு 1961ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.