2014-11-11 15:49:52

முதல் உலகப் போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி


நவ.11,2014. முதல் உலகப் போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இச்செவ்வாய் முற்பகல் 11 மணிக்கு ஐரோப்பாவிலும், காமன்வெல்த் நாடுகளிலும் இரண்டு நிமிடம் மௌனம் அனுசரிக்கப்பட்டது.
கடைகள், இரயில் நிலையங்கள், விமானநிலையங்கள் என எல்லா இடங்களிலும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
1918ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி முற்பகல் 11 மணிக்கு முதல் உலகப் போர் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. பெரிய போர் என்றும் அழைக்கப்படும் இந்தப் போரில், 90 இலட்சம் படை வீரர்கள் மற்றும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பொதுமக்களும் உயிரிழந்தனர். இப்போர் உலக நாடுகளின் வரலாற்றையும் வரைபடத்தையும் மாற்றியமைத்தது.
1914ல் தொடங்கிய இந்தப் போர், சரியாக நான்கு ஆண்டுகள் நான்கு மாதங்கள் நடைபெற்றது. ஆஸ்திரியா-ஹங்கேரி, ஜெர்மனி, பவேரியா, ஓட்டமான் பேரரசு உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக, பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் போரில் ஈடுபட்டன.
1918ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரான்ஸின் மேற்குப் பகுதியில் நடந்த கடும் சண்டையில் பிரிட்டன் படைகளை ஜெர்மனி சிதறடித்தது. எனினும் அதன் பலம் நீடிக்கவில்லை. பிரிட்டன்-பிரான்ஸ் படைகள் திருப்பித் தாக்கத் தொடங்கின. அதன் பின்னர் ஜெர்மனியின் கூட்டணி நாடுகள் முடிவுக்குவந்ததன் பயனாக, “இனிமேல் அமைதி காப்போம்; போரில் ஈடுபட மாட்டோம்”என்று சொல்லி, தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ஜெர்மனி கையெழுத்திட்டது.
1918ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி முற்பகல் 11 மணிக்கு முதல் உலகப் போர் முடிவடைந்தது. ஆயினும், கடைசி நேரத்தில் தேவையில்லாமல் பல வீரர்கள் உயிரிழந்தார்கள்.

ஆதாரம் : The Guardian, தி இந்து







All the contents on this site are copyrighted ©.