2014-11-11 15:49:03

மிகக் கடுமையான குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கென புதிய குழு நியமனம், திருப்பீடம்


நவ.11,2014. “மனித மாண்புக்கும், குடும்பத்தை அமைப்பதற்கும், அமைதிக்கும் தொழில் எவ்வளவு முக்கியமானது!”என்ற வார்த்தைகளை இச்செவ்வாயன்று தனது டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், திருப்பீடத்துக்கான அயர்லாந்தின் புதிய தூதுவர் Emma MADIGAN அவர்களை இச்செவ்வாயன்று வத்திக்கானில் சந்தித்தார் திருத்தந்தை.
மிகக் கடுமையான குற்றங்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்கென, திருப்பீடம் புதிய நீதித்துறை குழு ஒன்றை உருவாக்குவதாக, இச்செவ்வாயன்று அறிவித்தது.
விசுவாசக் கோட்பாட்டுத் திருப்பேராயத்துக்குள் செயல்படவிருக்கும் இப்புதிய குழு, சிறார் பாலியல் முறைகேடு, ஒப்புரவு அருளடையாளத்தோடு தொடர்புடைய சில கடுமையான மீறல்கள் உட்பட மிகக் கடுமையான குற்றங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்தினால்கள் அல்லது ஆயர்கள் என ஏழு பேரைக் கொண்ட இப்புதிய குழுவின் உறுப்பினர்கள் திருத்தந்தையால் நியமிக்கப்படுவார்கள்.
கடுமையான குற்றங்கள் புரிந்தார் என குற்றம் சாட்டப்படும் ஆயர்கள் மற்றும் திருத்தந்தையின் வேண்டுகோளின்பேரில் கேட்கப்படும் சில குறிப்பிட்ட விவகாரங்கள் இக்குழுவினால் பரிசீலிக்கப்படும்.
இது குறித்த புதிய சட்டங்கள் நவம்பர் 11, இச்செவ்வாயன்று அமலுக்கு வருகின்றன. இவை திருஅவையின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள் ஒஸ்ஸெர்வாத்தோரே ரொமானோவிலும், திருப்பீடத்தின் அரசாணைச் சுவடியிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.