2014-11-11 15:49:28

பெர்லின் சுவர் பற்றி திருத்தந்தை கூறிய செய்தி, நேபாள அரசியல் அமைப்பில் இடம்பெற வேண்டும்


நவ.11,2014. பாலங்களைக் கட்டவும், ஒரு சந்திப்புக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள அழைப்புச் செய்தியை ஏற்பதாய் நேபாளத்தின் புதிய அரசியல் அமைப்பு அமைய வேண்டுமென்று நேபாள அரசியல்வாதிகள் சிலர் கூறியுள்ளனர்.
பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதன் 25ம் ஆண்டை முன்னிட்டு இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உலகுக்கு விடுத்துள்ள அழைப்பை, நேபாளத்தின் முன்னாள் மாவோயிஸ்டு உறுப்பினர் உட்பட அரசியல்வாதிகள் ஏற்றுள்ளனர் என ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது.
நேபாளத்தில், நூற்றாண்டுகளாக இந்து அரச குடும்ப வாரிசு ஆட்சி செய்த பின்னர், தற்போது அந்நாட்டின் முதல் சனநாயக அரசியல் அமைப்பைத் தொகுப்பதில் அந்நாட்டின் ஒன்றிணைந்த கம்யூனிசக் கட்சித் தலைவர் Pushpakamal Dahal உட்பட சில அரசியல்வாதிகள் ஈடுபட்டுள்ளனர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இக்கூற்று, ஜெர்மனியின் பிரிவினைக்கு நேரிடையாக விடுத்த செய்தியாக இருந்தாலும், இது, நேபாளச் சூழலுக்கும் அதேமாதிரியான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது என்று Pushpakamal Dahal தெரிவித்தார்.
ஒவ்வொரு மதமும், இனமும், கலாச்சாரமும், பாரம்பரியமும், சமூக வேறுபாடுகளும் நியாயமான முறையில் நடத்தப்படுவதற்கு உறுதி வழங்கப்பட வேண்டுமென்றும் கூறிய Pushpakamal Dahal, உலகைப் பிரிக்கும் அனைத்துச் சுவர்களையும் இடிப்பதற்கு திருத்தந்தையுடன் மாவோயிஸ்ட் கட்சியும் விருப்பம் கொள்கிறது என்று கூறினார்.

ஆதாரம் : Asianews







All the contents on this site are copyrighted ©.