2014-11-11 14:17:31

புனிதரும் மனிதரே - காலணிகள் அணியாத ஆயர்


1066ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பிறந்த காட்ஃப்ரி, தன் சிறு வயதிலேயே தாயை இழந்தார். இவருக்கு 5 வயதானபோது, இவரது தந்தை இவரை புனித பெனெடிக்ட் துறவு மடத்தில் சேர்த்தார். அங்கு, சிறுவன் காட்ஃப்ரி ஒரு துறவியைப் போல் உடையணிந்து, 'சின்னத் துறவி' என்ற செல்லப் பெயருடன் வாழ்ந்துவந்தார். 25வது வயதில் குருவாகத் திருநிலைபடுத்தப்பட்ட காட்ஃப்ரி அவர்கள், விரைவில் துறவுமடத் தலைவரானார்.
இவரது விருப்பத்திற்கு மாறாக, 1103ம் ஆண்டு, காட்ஃப்ரி அவர்கள், ஏமியன்ஸ் (Amiens) மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டார். பாவப்பரிகாரம் செய்வதற்கு பாதயாத்திரை மேற்கொள்ளும் ஒரு திருப்பயணியைப் போல், இவர் ஏமியன்ஸ் நகருக்குள், காலணிகள் அணியாமல் நுழைந்து, ஆயர் இல்லம் சென்று, பொறுபேற்றார். ஆயர் இல்லத்தில், வெகு எளிய வாழ்வைப் பின்பற்றினார். இயேசுவின் இறுதி இரவுணவை நினைவுகூரும் வகையில், இவர் தினமும் ஆயர் இல்லத்தில் 13 ஏழைகளுடன் உணவருந்தினார்.
தங்கள் உரிமைகளைக் கேட்டுப் போராடிய விவசாயத் தொழிலாளர்களுக்கு உறுதுணையாக விளங்கினார் ஆயர் காட்ஃப்ரி. ஏழைகளுக்குப் பணியாற்றுவதே திருஅவையின் முதன்மையானப் பணி என்று ஆயர் காட்ஃப்ரி அவர்கள் வலியுறுத்தி வந்ததால், செல்வந்தர்கள் பலரது கோபத்திற்கு இவர் உள்ளானார். ஒருமுறை இவர் மீது கொலை முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. 1115ஆம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி புனித காட்ஃப்ரி அவர்கள் (St Godfrey of Amiens) இறையடி சேர்ந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.